தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு இல்லை டாக்டர் ராமதாஸ் பேச்சு


தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு இல்லை டாக்டர் ராமதாஸ் பேச்சு
x
தினத்தந்தி 12 March 2017 12:00 AM GMT (Updated: 11 March 2017 8:41 PM GMT)

பட்டாபிராமில் நடந்த பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் பேசிய டாக்டர் ராமதாஸ், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு இல்லை என்று குற்றம் சாட்டினார்.

ஆவடி,

திருவள்ளூர் மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் பட்டாபிராமில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில துணை பொதுச்செயலாளர் கே.என்.சேகர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:–

மத்தியில் காங்கிரஸ் கட்சியும், மாநிலத்தில் தி.மு.க.வும் இருந்தபோது நாம் மண்ணை இழந்தோம். மொழியை இழந்தோம். உரிமைகளை இழந்தோம். திராவிட கட்சிகளால் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறோம்.

சட்டம், ஒழுங்கு இல்லை

இந்திரா காந்தி கச்சத்தீவை கொடுக்கும் போது அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி ஏன் கொடுக்கிறீர்கள்? என்று கேள்வி கேட்கவில்லை. காவிரியை இழந்து இருக்கிறோம். காவிரியில் 3 அணைகளை கட்டியதும் தி.மு.க. ஆட்சியில்தான்.

தற்போது தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு இல்லை. எந்தெந்த வகையில் தமிழகத்தில் கொள்ளை அடிக்கலாம் என்று நினைத்து அதை மட்டும் செய்கிறார்கள். சட்டம், ஒழுங்கு பற்றி கவலை இல்லை. இங்கே நடப்பது பொம்மை ஆட்சி. இதுதான் இருண்ட காலம்.

தமிழக மக்கள் விழிப்பாக உள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 370 சாதிகளுக்கும் உண்மையாக பாடுபடுபவர் அன்புமணி ராமதாஸ் மட்டுமே. பா.ம.க. சார்பில் அனைத்து பகுதிகளிலும் 7 பேர் கொண்ட குழுவை உருவாக்கி உள்ளோம். அதில் 7 சாதியை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். வரும் எம்.பி. தேர்தலில் தமிழகத்தில் 10 இடங்களை நாம் கைப்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

9 தீர்மானங்கள்

கூட்டத்தில் சீமை கருவேல மரங்களை அழிக்க மாவட்ட நிர்வாகம் பசுமை தாயகம் நடைமுறைப்படுத்தி உள்ள புதிய உத்தியை கையாண்டு நச்சு மரங்களை அடியோடு ஒழிக்க வேண்டும்.

எண்ணூர் அருகே கடலில் கச்சா எண்ணெய் கலந்ததால் கடல் வளம் பாதிக்கப்பட்டு அதனால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story