காஞ்சீபுரம் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை திட்ட பணிகளை பார்வையிட்ட காஷ்மீர் மந்திரி


காஞ்சீபுரம் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை திட்ட பணிகளை பார்வையிட்ட காஷ்மீர் மந்திரி
x
தினத்தந்தி 11 March 2017 11:00 PM GMT (Updated: 2017-03-12T02:26:59+05:30)

காஞ்சீபுரம் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை திட்ட பணிகளை காஷ்மீர் மந்திரி தலைமையிலான குழுவினர் பார்வையிட்டனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டப்பணிகளை காஷ்மீர் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் மந்திரி அப்துல்ஹக்கான் தலைமையில் கிராம சுகாதார இயக்குனர் ரகுமான் கஹாசி, ஒருங்கிணைந்த குடிநீர் மேலாண்மை திட்ட அலுவலர் தீபத் துபே, மந்திரியின் தகவல் அலுவலர் ஷெக் சலீம், ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் பர்வைஸ் இக்பால் ஆகியோர் அடங்கிய குழுவினர் பார்வையிட்டனர்.

இந்த குழுவினர் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் அஞ்சூர் ஊராட்சியில் ரூ.21 லட்சத்து 20 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்டுள்ள பசுமை குடில் நாற்றங்கால், ரூ.5 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள நாவல் ஏரி வரத்துக்கால்வாய் மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டனர்.

கலந்துரையாடினார்கள்

பின்னர் அவர்கள் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம் சிலாவட்டம் ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகள், வெள்ளைப்புதூர் ஊராட்சியில் ரூ.5 லட்சத்து 30 ஆயிரம் செலவில் வேடந்தாங்கல்–வெள்ளைப்புதூர் சாலையில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகள், வெள்ளப்புதூரில் ரூ.21 லட்சத்து 86 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்டுள்ள பசுமைக்குடில் நாற்றங்கால், பிரதமர் வீட்டுவசதி திட்டத்தில் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள வீடுகள் போன்றவற்றை பார்வையிட்டனர். அந்த திட்டப்பணிகள் நிறைவேற்றபட்ட வழிமுறைகள், அதன் பயன்கள் குறித்தும் கேட்டறிந்தனர்.

பின்னர் சிலாவட்டம் கிராம ஊராட்சி சேவை மையத்தில் புதுவாழ்வு திட்டத்தின் செயல்பாடுகள், சுகாதார மேம்பாடு குறித்து கிராம வறுமை ஒழிப்பு சங்க ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்பினரிடம் கலந்துரையாடினார்கள். இந்த நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயக்குமார், செயற்பொறியாளர் தணிகாசலம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story