சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது குறித்து வக்கீல்கள், ஆணையர்களுடன் கலெக்டர் ஆலோசனை

திருவள்ளூர் மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது குறித்து வக்கீல்கள், ஆணையர்களுடன் கலெக்டர் சுந்தரவல்லி ஆலோசனை நடத்தினார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக கோர்ட்டால் திருவள்ளூர் மாவட்டத்திற்கு என நியமிக்கப்பட்ட 12 வக்கீல்கள், ஆணையர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி தலைமை தாங்கினார். கூட்டத்தில் இதுவரை திருவள்ளூர் மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்ட விழிப்புணர்வுகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.
தனியார் இடங்களில் இருக்கும் சீமைக்கருவேல மரங்களை எவ்வாறு அகற்றப்படவேண்டும் என்பது குறித்து மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
12 பகுதிகளாக பிரிப்புமேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்கள், 10 பேரூராட்சிகள், 5 நகராட்சிகள், 12 வருவாய் வட்டம் போன்றவை உள்ளடங்கிய 12 பகுதிகளாக பிரிக்கப்பட்டு அவை வக்கீல்கள், ஆணையர்களுக்கிடையே பிரித்து கொள்ளப்பட்டது.
இந்த கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சட்டம்) வரதராஜன், பொன்னேரி சப்–கலெக்டர் தண்டபாணி மற்றும் ஆர்.டி.ஓ.க்கள், தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






