வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மண்பானைகள் விற்பனை அமோகம்


வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மண்பானைகள் விற்பனை அமோகம்
x
தினத்தந்தி 11 March 2017 10:15 PM GMT (Updated: 11 March 2017 9:09 PM GMT)

திருப்பூரில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மண் பானைகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் நகரின் பெரும்பாலான இடங்களில் நுங்கு, பதநீர், கம்பங்கூழ், மோர், இளநீர், தர்பூசணி போன்றவற்றின் விற்பனை அதிகரித்துள்ளது. ஆங்காங்கே அரசியல் கட்சியினர் மற்றும் பொதுநல அமைப்பினர் நீர் மோர் பந்தல் அமைத்து பொது மக்களுக்கு இலவசமாக மோர் வழங்கி வருகின்றனர்.

மேலும் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் தலையில் துணியை போட்டுக்கொண்டும், இளம்பெண்கள், கல்லூரி மாணவிகள் தங்கள் துப்பட்டாவை தலையில் போட்டுக்கொண்டும், முகத்தை மூடிக்கொண்டும் செல்கிறார்கள். இந்த நிலையில் திருப்பூர்- தாராபுரம் ரோட்டில் உள்ள மண்பாண்டங்கள் விற்பனை கடைகளில் மண்பானைகளை மக்கள் அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள். இதனால் மண்பானை விற்பனை சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.

இது குறித்து மண்பாண்டங்கள் விற்பனையாளர்களிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-

விற்பனை அமோகம்

திருப்பூரில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அக்னி நட்சத்திரம் நெருங்குவதால் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும். மக்கள் எவ்வளவு தான் குளிர்ச்சியான பொருட்களை வாங்கி சாப்பிட்டாலும் மண்பானையில் தண்ணீர் ஊற்றி வைத்து அந்த தண்ணீர்குடிப்பதில் உள்ள சுகமே தனிதான். ஆகவே கோடை காலங்களில் மக்கள் அதிக அளவில் மண்பானைகளை வாங்கிச்செல்கிறார்கள்.

மண்பானைகளை மதுரை, சிவகங்கை, புதுச்சேரி, கோவை ஆகிய இடங்களில் இருந்து விற்பனைக்கு வாங்கி வந்துள்ளோம். ஒரு பானை ரூ.300 முதல் ரூ.450 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே மண்பானை விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக அவர்கள் தெரிவித்தனர். 

Next Story