பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் மாசிமகத் திருவிழா


பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் மாசிமகத் திருவிழா
x
தினத்தந்தி 11 March 2017 10:30 PM GMT (Updated: 11 March 2017 9:19 PM GMT)

குளமங்கலம் பெருங் காரையடி மீண்ட அய்யனார் கோவிலில் நடக்கும் மாசிமகத் திருவிழாவில் பெரிய குதிரை சிலைக்கு மலைபோல் காகிதப்பூ மாலைகள் குவிந்தன.

கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வில்லுணி ஆற்றங்கரையில் எழுந்தருளியுள்ள பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் முன்பு 35 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள குதிரை சிலை ஆசியாவிலேயே பெரிய குதிரை சிலை என்ற புகழ் பெற்றது. இந்த கோவிலின் மாசிமகத் திருவிழா 2 நாட்கள் நடக்கிறது. இதில் முதல் நாளான நேற்று திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பெரிய குதிரை சிலைக்கு அதே உயரத்தில் காகிதப்பூ மாலைகள் அணிவிக்கப்பட்டது. விழாவில் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலிருந்தும் நேர்த்திக்கடன் செய்து கொண்ட பக்தர்கள் காகிதப்பூ மாலைகளை லாரி, மினிலாரி, வேன், கார் போன்ற வாகனங்களில் கொண்டு வந்து நீண்ட வரிசையில் நின்று அணிவித்தனர்.

மாட்டுவண்டியில் வந்த பக்தர்கள்

காகிதப்பூ மாலைகள் மட்டுமின்றி, பழங்களால் கட்டப்பட்ட மாலைகள், பூ மாலைகள் ஆகியவையும் அணிவிக்கப்பட்டது. சில பக்தர்கள் நாட்டிய குதிரைகளின் நாட்டியத்துடன் வந்து மாலைகளை அணிவித்தனர். ஒரு சில பக்தர்கள் பெரிய குதிரை சிலைக்கு அணிவிக்கும் காகிதப்பூ மாலைகளை மங்கள வாத்தியங்களுடன் தலையில் சுமந்து வந்தனர். பல வருடங்களுக்கு முன்பு இந்த திருவிழாவிற்கு கால்நடை யாகவும், மாட்டு வண்டியிலும் பக்தர்கள் வந்து தங்கி இருந்து தரிசனம் செய்துவிட்டு சென்ற வண்ணம் இருந்தனர். அந்த பழமை மாறக்கூடாது என்பதற்காக பக்தர்கள் பலர் இந்த ஆண்டும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மாட்டுவண்டிகளிலும் நடந்து வந்தும் தங்கி தரிசனம் செய்து செல்கின்றனர்.

திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கீரமங்கலம், அறந்தாங்கி, பேராவூரணி, திருச்சிற்றம்பலம், கொத்தமங்கலம், ஆலங்குடி மற்றும் பல ஊர்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிக்காக தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது. பக்தர்களுக்காக சிறப்பு மருத்துவ சிகிச்சைப் பிரிவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பாதுகாப்பு

திருவிழாவில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் இந்த கூட்டத்தில் சமூகவிரோதிகள் புகுந்து பக்தர்களுக்கு தொல்லைகள் கொடுப்பதை தடுக்க கீரமங்கலம் போலீசார் தலைமையில் கூடுதல் போலீசாருடன், ஊர் காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். கூட்டத்தில் சமூக விரோதிகளை கண்டறிய பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு கண் காணிக்கப்பட்டது.

தெப்பத்திருவிழா

திருவிழாவை காண புதுக்கோட்டை, தஞ்சை, சிவகங்கை மற்றும் பல மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர். மேலும் கோவில் மற்றும் பல்வேறு பகுதிகளிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திரு விழாவை முன்னிட்டு நேற்று முன்தினத்தில் இருந்தே பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வந்த நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை)நடக்கும் தெப்ப திருவிழாவில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர். 

Next Story