சொகுசு வாழ்க்கைக்காக மாந்திரீகத்தில் கார்த்திகேயன் ஈடுபட்டாரா? போலீஸ் விசாரணை


சொகுசு வாழ்க்கைக்காக மாந்திரீகத்தில் கார்த்திகேயன் ஈடுபட்டாரா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 11 March 2017 11:00 PM GMT (Updated: 2017-03-12T02:50:32+05:30)

சொகுசு வாழ்க்கைக்கா மாந்திரீகத்தில் கார்த்திகேயன் ஈடுபட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெரம்பலூர்,

பெரம்பலூரில் மந்திரவாதி கார்த்திகேயன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பரபரப்பாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிறுவயதில் இருந்தே மாந்திரீகத்தில்...

பெரம்பலூர் மாவட்டம் நாராயணமங்கலம் அருகே மருதடி செல்லும் சாலையில் குடில் அமைத்து மண்டை ஓடுகள், மனித ரத்தம் உள்ளிட்டவற்றை வைத்து பூஜை செய்ததாக கடந்த ஆண்டு மந்திரவாதி கார்த்திகேயன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். எனினும் சிறையிலிருந்து மீண்டும் வெளியே வந்து மாந்திரீக பூஜை செய்யும் தொழிலில் கார்த்திகேயன் ஈடுபட்டிருக்கிறார். எனவே அவர் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு மாந்திரீகத்தில் ஈடுபட்டாரா? என்பது குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்ட அவர் போது அவர் கூறியதாவது:-

பெரம்பலூர் ஆலம்பாடி பகுதியில் உள்ள ஏழ்மையான குடும்பத்தில் தான் கார்த்திகேயன் பிறந்திருக்கிறார். சிறுவயதில் இருந்தே மந்திரம் மூலம் வித்தை செய்தல் உள்ளிட்டவற்றால் ஈர்க்கப்பட்டார். அந்த வகையில் படிப்படியாக மந்திரங்கள் மூலம் அமைதி பெறாமல் சுற்றித்திரியும் ஆன்மாவுடன் பேசுதல் உள்ளிட்டவற்றை கற்று கொண்டுள்ளார். இதற்காக புத்தகங்களை தனியாக எழுதி அதனை விற்பனை செய்தும் வந்திருக்கிறார்.

தொழிலதிபர்களிடம் தொடர்பா?

மேலும் இணையதளத்திலும் தனது மாந்திரீக பயிற்சி குறித்து விளம்பரப்படுத்தியிருக்கிறார். அந்த வகையில் பல்வேறு பிரச்சினைகளுடன் வரும் மக்களிடம் காளி பூஜையில் வைக்கப்பட்ட தகடு, மை உள்ளிட்டவற்றுக்காக பணம் பெற்று தொழிலை விரிவுபடுத்தியிருக்கிறார். எனவே தான் பெரம்பலூரில் ரூ.20 ஆயிரம் கொடுத்து அவரால் வாடகைக்கு இருக்க முடிகிறது. மேலும் விலையுயர்ந்த காரை பயன்படுத்தி வருகிறார். எனவே அவர் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு மாந்திரீகத்தில் ஈடுபடுவது தெரிய வருகிறது. கடந்த ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட கார்த்திகேயன் வெளியே வந்தது எப்படி? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. எனவே தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோரிடம் அவருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகமும் வருகிறது.

சிஷ்யன் உள்பட 4 பேர்

கார்த்திகேயனின் சிஷ்யன் போல் மதுரையை சேர்ந்த வினோத்குமார் இருந்திருக்கிறார். வினோத்குமார் மூலமே சுடுகாட்டு வெட்டியான்களிடமிருந்து சென்னையில் கல்லூரி மாணவி உடலை தோண்டி எடுத்து காரில் பெரம்பலூருக்கு கொண்டு வந்திருப்பது தெரிய வருகிறது. வினோத்குமார் உள்பட 4 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிணத்தை தோண்டி எடுத்து மாந்திரீகத்திற்காக கொண்டு வந்த அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story