சிற்றார்–2 அணை பகுதியில் 46.2 மி.மீ. மழை பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 11 அடியாக உயர்வு


சிற்றார்–2 அணை பகுதியில் 46.2 மி.மீ. மழை பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 11 அடியாக உயர்வு
x
தினத்தந்தி 11 March 2017 10:30 PM GMT (Updated: 2017-03-12T02:50:56+05:30)

குமரி மாவட்ட அணைப்பகுதிகளில் மழை பெய்தது. இதனால் சிற்றார்–2 அணை பகுதியில் 46.2 மி.மீ. மழை பதிவானதுடன், பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 11 அடியாக உயர்ந்தது.

நாகர்கோவில்,

பருவ மழை பொய்த்துப்போனதின் காரணமாக குமரி மாவட்டம் வறட்சியின் கோரத்தாண்டவத்தில் சிக்கித் தவித்து வருகிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டதோடு, குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. மழை பெய்தால்தான் வறட்சியை சமாளிக்க முடியும் என்ற நிலையில், கடந்த சில தினங்களாக குமரி மாவட்டப்பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது.

இந்த மழையால் அணைகளின் நீர்மட்டம் சிறிது, சிறிதாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் அணைப்பகுதிகளில் சுமாரான மழை பெய்துள்ளது. நேற்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:–

 மழை அளவு


பேச்சிப்பாறை– 17.2, பெருஞ்சாணி– 29.2, சிற்றார் 1– 25.2, சிற்றார் 2– 46.2, பொய்கை– 3.4, மாம்பழத்துறையாறு– 21, ஆணைக்கிடங்கு– 11, புத்தன் அணை– 30.4, சுருளோடு– 22.5, கன்னிமார்– 2.2., ஆரல்வாய்மொழி– 3.4. பாலமோர்– 13.2 என்ற அளவில் மழை பதிவாகியிருந்தது.

இதனால் பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 141 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் தண்ணீர் திறக்கப்படவில்லை. அணை நீர்மட்டம் 4.45 அடியாக உள்ளது. பெருஞ்சாணி அணைக்கு 117 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 60 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நேற்று முன்தினம் 10½ அடியாக இருந்த இந்த அணை நீர்மட்டம் நேற்று 11 அடியாக உயர்ந்தது.

முக்கடல் அணை


சிற்றார்–1 அணைக்கு 12 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 12 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணை நீர்மட்டம் 0.89 அடியாக உள்ளது. சிற்றார்–2 அணைக்கு 50 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 50 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 0.98 அடியாக உள்ளது. மாம்பழத்துறையாறு அணைக்கு 1 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. அணை நீர்மட்டம் 26.47 அடியாக உள்ளது.

நாகர்கோவில் நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய முக்கடல் அணை நீர்மட்டம் தொடர்ந்து மைனஸ்–0 அடியாக உள்ளது. அணையில் மழையும் இல்லை, தண்ணீர் வரத்தும் இல்லை. இதனால் அணையின் நீர்மட்ட உயர்வில் எந்த முன்னேற்றமும் இல்லை.


Next Story