மின்சாரத்துறை அலுவலகம் அருகே பாலித்தீன் பையில் கிடந்த ஜெலட்டின் குச்சிகள் போலீஸ் விசாரணை


மின்சாரத்துறை அலுவலகம் அருகே பாலித்தீன் பையில் கிடந்த ஜெலட்டின் குச்சிகள் போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 11 March 2017 9:33 PM GMT (Updated: 2017-03-12T03:03:04+05:30)

மூலமற்றம் மின்சாரத்துறை அலுவலகம் அருகே பாலித்தீன் பையில் ஜெலட்டின் குச்சிகள் கிடந்தன. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலமற்றம்,

இடுக்கி மாவட்டம் மூலமற்றம் பகுதியில் நீர்மின் உற்பத்தி நிலையம் உள்ளது. இடுக்கி அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் மூலம் இங்கு மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மின் உற்பத்தி நிலையத்தின் அருகில் மின்சாரத்துறை உதவி என்ஜினீயர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அலுவலக கட்டிடத்தின் அருகில் பாலித்தீன் பை ஒன்று கிடப்பதை பார்த்தனர்.

இதையடுத்து அந்த பையை எடுத்து பார்த்த போது அதில் 11 ஜெலட்டின் குச்சிகள், 3 பேட்டரிகள் மற்றும் மின்சார வயர்கள் இருந்துள்ளன. இதில் ஜெலட்டின் குச்சிகள் பைப் வெடிகுண்டு போல் வைக்கப்பட்டிருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் காஞ்சார் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் ஜெலட்டின் குச்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

அலுவலகத்தை தகர்க்க முயற்சியா?


பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ஜெலட்டின் குச்சிகள் மற்றும் பொருட்களை கைப்பற்றி பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செயலிழக்க வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்சாரத்துறை அலுவலகத்தை தகர்க்க மர்ம நபர்கள் முயன்றனரா? அல்லது அணையில் வெடிபொருட்களை பயன்படுத்தி மீன்களை பிடிப்பதற்காக யாரேனும் அந்த பொருட்களை அங்கு கொண்டு வந்து வைத்தார்களா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரத்துறை அலுவலகம் அருகே வெடிபொருட்கள் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story