முகநூல் காதலனை தேடிவந்த கல்லூரி மாணவி போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்


முகநூல் காதலனை தேடிவந்த கல்லூரி மாணவி போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்
x
தினத்தந்தி 11 March 2017 9:33 PM GMT (Updated: 2017-03-12T03:03:04+05:30)

ஏரலில் இருந்து குளச்சலுக்கு முகநூல் காதலனை தேடி வந்த கல்லூரி மாணவியை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

குளச்சல்,

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கும், குமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் இடையே முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது.

அதன்பின்பு இருவரும் குடும்ப பின்னணி, எதிர்கால வாழ்க்கை பற்றி பேசிக்கொண்டனர். மேலும் விரைவில் இருவரும் சந்தித்து கொள்ளவும் முடிவு செய்தனர். எப்போது சந்திப்பது என்பதை காதலன் முடிவாக சொல்லவில்லை.

குளச்சல் வந்தார்

இந்தநிலையில் அந்த மாணவி திடீரென ஏரலில் இருந்து தனியாக புறப்பட்டு குளச்சல் வந்தார். இங்கு வந்து சேர்ந்ததும் காதலனுக்கு தகவல் தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த அவர் அந்த மாணவியை தனக்கு தெரிந்த பிரமுகர் வீட்டுக்கு அழைத்து சென்றார்.

அங்கு சென்ற பின்னர் அவர்கள் திருமணம் செய்து கொள்வது பற்றி யோசித்தனர். அப்போது  மாணவிக்கு இன்னும் திருமண வயது ஆகவில்லை என்பது தெரியவந்தது. எனவே மாணவிக்கு திருமண வயது ஆகும் வரை பொறுத்திருப்போம் என்று முடிவு செய்தனர்.

பெற்றோரிடம் ஒப்படைப்பு

இதற்கிடையே மாணவியின் பெற்றோர் அவரை காணாமல் தவித்தனர். அவர்கள் இதுபற்றி அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர்.

இந்தநிலையில் அந்த மாணவி, குளச்சலுக்கு வந்த தகவலை பெற்றோருக்கு தெரியப்படுத்தினார். உடனே அவர்கள், ஏரலில் இருந்து போலீஸ் துணையுடன் குளச்சல் வந்தனர். குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் சம்பவம் குறித்து தெரிவித்தனர்.

குளச்சல் மகளிர் போலீசார் மாணவியை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். அங்கு அவர்கள் மாணவிக்கு அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.


Next Story