5 மாநில சட்டசபை தேர்தல் முடிவு ஊழலுக்கு எதிராக மக்களின் மனநிலையை பிரதிபலிப்பதாக உள்ளது


5 மாநில சட்டசபை தேர்தல் முடிவு ஊழலுக்கு எதிராக மக்களின் மனநிலையை பிரதிபலிப்பதாக உள்ளது
x
தினத்தந்தி 11 March 2017 10:40 PM GMT (Updated: 2017-03-12T04:10:42+05:30)

5 மாநில சட்டசபை தேர்தல் முடிவு ஊழலுக்கு எதிராக மக்களின் மனநிலையை பிரதிபலிப்பதாக உள்ளது என குமாரசாமி கூறியுள்ளார்.

சிக்கமகளூரு

5 மாநில சட்டசபை தேர்தல் முடிவு ஊழலுக்கு எதிராக மக்களின் மனநிலையை பிரதிபலிப்பதாக உள்ளது என ஜனதாதளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி கூறியுள்ளார்.

பேட்டி

சிக்கமகளூரு அருகே சக்கராயப்பட்டணாவில் முன்னாள் எம்.எல்.ஏ. தர்மேகவுடாவின் தாய் சரோஜா நினைவு வேந்தல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி கலந்துகொண்டு, சரோஜாவின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

அதன்பிறகு குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

ஊழலுக்கு எதிராக மக்களின் மனநிலை

உத்தரபிரதேசம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் ஊழலுக்கு எதிராக மக்களின் மனநிலையை பிரதிபலிப்பதாக உள்ளது. இதை கர்நாடக காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சியை சேர்ந்த தலைவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். கர்நாடகத்தை கடந்த 10 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்துவரும் தேசிய கட்சிகள் மக்களின் வளர்ச்சியில் அக்கறை காட்டாமல், ஊழல் செய்து வருகின்றன. எனவே இந்த 2 தேசிய கட்சிகள் மீது கர்நாடக மக்கள் கோபத்தில் உள்ளனர்.

குறிப்பாக எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு கர்நாடகத்தில் கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளது. மாநிலம் முழுவதும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடும், விலங்குகளுக்கு தீவன தட்டுப்பாடும் ஏற்பட்டு உள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் ஆங்காங்கே தற்கொலை செய்து வருகின்றனர்.

விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்

மாநிலத்தை ஆளும் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு விவசாயிகளின் கடனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்காமல் மத்திய அரசை குறைசொல்லி வருகிறது. அதேப்போல் இங்குள்ள பா.ஜனதா மாநில தலைவர்கள் மத்திய அரசிடம் பேசி வறட்சி நிவாரணத்தொகை கூடுதலாக வாங்கி தர நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அதை விட்டு விட்டு மாநில அரசை குறை வருகின்றனர். இப்படி மாறி மாறி ஒருவரை ஒருவர் குறை கூறுவதை நிறுத்தி விட்டு விவசாயிகள், மற்றும் பொதுமக்களுக்கு நல்லது செய்ய முன்வர வேண்டும்.

கடந்த 2010–ம் ஆண்டு எடியூரப்பா ஆட்சி காலத்தில் இதேப்போன்று மாநிலத்தில் வறட்சி நிலவியது. அப்போது விவசாயிகளின் கடனை ரத்து செய்ய எங்களது கட்சி எடியூரப்பாவிடம் கோரிக்கை விடுத்தது. ஆனால் அரசு கஜானா காலியாக உள்ளதாக கூறி விவசாயிகளின் கடனை ரத்து செய்ய எடியூரப்பா முன்வரவில்லை. இந்த ஆண்டும் அதேப்போன்ற மாநிலத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது.

எனவே இப்போதாவது விவசாய கடனை தள்ளுபடி செய்ய சித்தராமையா தலைமையிலான அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story