‘அயோத்தியில் விரைவில் ராமர் கோவில் கட்டப்படும்’ சிவசேனா நம்பிக்கை


‘அயோத்தியில் விரைவில் ராமர் கோவில் கட்டப்படும்’ சிவசேனா நம்பிக்கை
x
தினத்தந்தி 11 March 2017 11:29 PM GMT (Updated: 2017-03-12T04:58:59+05:30)

உபி சட்டசபை தேர்தலில் பா.ஜனதா பெற்ற வெற்றியை தொடர்ந்து, அயோத்தியில் ராமர் கோவில் விரைவில் கட்டப்படும் என்று சிவசேனா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மும்பை, மார்ச்.12–

உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் பா.ஜனதா பெற்ற அமோக வெற்றியை தொடர்ந்து, அயோத்தியில் ராமர் கோவில் விரைவில் கட்டப்படும் என்று சிவசேனா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பா.ஜனதா வெற்றி

403 சட்டசபை தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேசத்தில் பாரதீய ஜனதா அமோக வெற்றி பெற்று 15 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. இதற்கு கூட்டணி கட்சியான சிவசேனா வாழ்த்து தெரிவித்துள்ளது.

இதுபற்றி அக்கட்சியின் தலைவர் சஞ்சய் ராவுத் எம்.பி. நேற்று மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:–

5 மாநில சட்டசபை தேர்தல் முடிவு வெளியாகி இருக்கிறது. பாரதீய ஜனதா அடைந்த மகத்தான வெற்றிக்காக பிரதமர் மோடியை பாராட்டுகிறோம். ராமரின் வனவாசம் முடிவடைந்து விட்டது. ஆகையால், அயோத்தியில் ராமர் கோவில் விரைவில் கட்டப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.

சிவசேனாவின் முக்கியத்துவம்

ஆளும் அரசுக்கு எதிராக நம்பத்தகுந்த மாற்று அணி இருக்கிற இடங்களில், மக்கள் மாற்றத்துக்காக வாக்களித்திருக்கிறார்கள். தோல்வி அடைந்தவர்கள் சிவசேனாவின் முக்கியத்துவத்தையும், மோடி அலை மும்பையில் நுழையாதவாறு சிவசேனா தடுத்த விதத்தையும் இப்போது உணர்கிறார்கள்.

எனினும், இந்த தேர்தல் முடிவுகள் மராட்டிய அரசியலில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அலை தணிந்து, புதிய அரசுகள் பதவி ஏற்கட்டும். அதன்பின்னர், மாநில அரசியல் சூழல் குறித்து நாங்கள் பேசுகிறோம்.

இவ்வாறு சஞ்சய் ராவுத் எம்.பி. தெரிவித்தார்.


Next Story