இதயத்தில் உண்டான கனவு இது...


இதயத்தில் உண்டான கனவு இது...
x
தினத்தந்தி 19 March 2017 12:37 PM IST (Updated: 19 March 2017 12:37 PM IST)
t-max-icont-min-icon

ரஷிய பெண் ஒருவர், சென்னை தினத்தந்தி அலுவலகத்திற்கு வந்து ‘‘வணக்கம்! உங்களை சந்திப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்’’ என்று சொன்னால் நமக்கு ஆச்சரியம் வரத்தானே செய்யும்!

ஷிய பெண் ஒருவர், சென்னை  தினத்தந்தி  அலுவலகத்திற்கு  வந்து ‘‘வணக்கம்!  உங்களை  சந்திப்பதில் நான்  மகிழ்ச்சியடைகிறேன்’’ என்று சொன்னால் நமக்கு ஆச்சரியம்  வரத்தானே செய்யும்! அவரது தமிழ் உச்சரிப்பு அவரைவிட அழகாக இருந்தது.

அவரை வரவேற்று உட்காரவைத்து பேசத் தொடங்கியதும், “நான் பழம்பெருமை வாய்ந்த மாஸ்கோ அரசு பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ் இலக்கியம் பயின்று கொண்டிருக்கிறேன். அதனால்தான் என்னால் இவ்வளவு தெளிவாக தமிழ் பேச முடிகிறது. ‘வெல்க தமிழ்’ என்ற உங்கள் உணர்ச்சிமிகுந்த வாசகம்தான் என்னை உங்கள் அலுவலகத்தை நோக்கி வரவைத்தது” என்றார். அவரது பெயர் அன்னா பெனெதிக்தொவா. வயது 22.

இவர் படித்துக்கொண்டிருக்கும் மாஸ்கோ அரசு பல்கலைக் கழகம் 1755-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அங்கு 1956-ம் ஆண்டு முதல் தமிழ் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கு தமிழ் பயிலும் நான்கு மாணவ- மாணவியர்களில் அன்னாவும் ஒருவர். அவர்களுக்கு ரஷிய பேராசிரியர் அலெக்சாண்டர் டுபியன்ஸ்கி தமிழ் இலக்கியம் கற்றுக் கொடுக்கிறார்.

ரஷியாவில் செல்யாபின்ஸ்க் என்ற பகுதியில் வசிக்கும் செர்ஜி, லில்லி தம்பதியரின் ஒரே மகள் அன்னா, தான் பயிலும் பல்கலைக்கழகத்தில் நடந்த அழகிப் போட்டியில் பங்கேற்று, ‘மிஸ் ரொமென்டிக்’ ஆக தேர்வாகியிருக்கிறார். இவர் 173 செ.மீ. உயரமும், 60 கிலோ எடையும், நீளமான கூந்தலையும் கொண்டிருக்கிறார். பாரதி கண்ட புதுமைப் பெண் போன்று நிமிர்ந்த நன்நடை, நேர்கொண்ட பார்வை, தெளிவான சிந்தனையுடன் கடந்த இரண்டு மாதங்களாக இந்தியாவை வலம் வந்துகொண்டிருக்கிறார். இந்திய- ரஷிய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மாணவர்கள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் இவரது வருகை அமைந்திருக்கிறது.

தமிழ் பயிலும் ஆர்வம் உங்களுக்கு எப்படி வந்தது?

“நான் இந்தியா பற்றி நிறைய படித்திருக்கிறேன். எனக்கு இந்த நாடு ரொம்ப பிடிக்கும். பல மொழிகளையும், பல இனங்களையும் கொண்ட ஒருங்கிணைந்த இந்த நாட்டு கலாசாரம் என்னை மிகவும் கவர்ந்தது. இந்திய கலாசாரம் பற்றி நான் அறிந்து கொண்டிருந்தபோதுதான், இந்தியாவில் பழம்பெருமை வாய்ந்த செம்மொழியான தமிழ் பற்றி எனக்கு தெரியவந்தது. மிகுந்த ஆர்வத்தோடு அதனை கற்பதற்காக சேர்ந்தேன்”

இப்போது நன்றாக தமிழ் பேசுகிறீர்கள். கற்றுக் கொள்ள ஆரம்பித்த காலகட்டம் எப்படி இருந்தது?

“முதல் ஒரு வருடம் மிகவும் கஷ்டப்பட்டேன். நிறைய முயற்சி எடுத்த பின்பு தான் மெல்ல மெல்ல சரியாக உச்சரிக்கவும், பேசவும் முடிந்தது. நான் இப்போது தொடர்ந்து தமிழர்களை சந்தித்து, தமிழிலே பேசுகிறேன். தமிழில் பேசவும் செய்கிறேன். மாஸ்கோவில் ரஷிய தமிழ்ச் சங்கம் இயங்கி வருகிறது. அதன் தலைவராக சாமியப்பன் சேகர் உள்ளார். அவர்கள் தமிழர்களின் கலாசார விழாக்களை நடத்துகிறார்கள். அதில் நானும் கலந்து கொண்டேன். நான் தமிழ் மொழியை கற்பதை அவர்கள் தெரிந்துகொண்டு எனக்கு பல்வேறு விதங்களில் உதவுகிறார்கள்”

உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்? தெரிந்த மொழிகளில் சிறந்த மொழி எது?

“ரஷிய மொழி, தமிழ், இந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகள் தெரியும். அதில் தமிழையே சிறந்த மொழி என்பேன்”

தமிழகத்தில் உங்களை கவர்ந்த விஷயங்கள் என்னென்ன?


“இங்கு நான் பல ஊர்களை சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். திருமண நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு சடங்கு, சம்பிரதாயங்கள் எப்படி நடக்கின்றன என்று பார்த்தேன். விழாக்களிலும் பங்கு கொண்டிருக்கிறேன். தமிழில் எனக்கு திருக் குறள் மிகவும் பிடிக்கும். கன்னியாகுமரிக்கு சென்று திருவள்ளுவர் சிலையை பார்த்து பிரமித்தேன். வாழ்க்கைக்கு தேவையான அரிய கருத்துக்களை திருக் குறள் அருமையாக சொல்கிறது. இன்னும் நிறைய இடங்களை தமிழ்நாட்டில் பார்க்க இருக்கிறேன்.

இங்குள்ள உணவுகளில் தோசை, பொங்கல் போன்றவை ருசியானவை. வீச்சு பரோட்டா அருமையான சுவை. அதில் குருமா சேர்த்து விரும்பி சாப்பிடுகிறேன். வீச்சு பரோட்டா தயாரிப்பதை பார்த்து பிரமித்திருக்கிறேன். நானும் செய்து பார்த்தேன். என்னால் முடியவில்லை”

தமிழக பெண்களிடம் உங்களை கவர்ந்த அம்சங்கள்?

“அழகானவர்கள். அன்பானவர்கள். என்னைப் போன்று கூந்தலை நீளமாக வளர்க் கிறார்கள். குடும்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். கலை, கலாசாரத்தில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக் கிறது”

அழகானவர்கள் இந்திய பெண்களா? ரஷிய பெண்களா?

“உலகிலே அழகானவர்கள் ரஷிய பெண்கள்தான்..”



இந்திய கலாசாரத்திற்கும், ரஷிய கலாசாரத்திற்கும் என்ன மாதிரியான வித்தியாசம் இருக்கிறது?

“இங்கு திருமண நிகழ்ச்சிகளில் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் வருகிறார்கள். அங்கு 50 பேர் வரைதான் வருவார்கள். சடங்கு, சம்பிரதாயங்கள் எளிமையாக இருக்கும். 22 முதல் 24 வயதிற்குள் பெண்கள் திருமணம் செய்து கொள்வார்கள். அனைத்தும் காதல் திருமணம்தான். அதனால் சரியான இளைஞர் ஒருவரை தேடிப்பிடிக்க வேண்டிய வேலையும் எங்களுக்கு இருக்கிறது. இங்கு பெற்றோர் பேசி முடித்துவைக்கும் திருமணங்களே அதிகம் நடப்பதால், இங்குள்ள பெண்களுக்கு அந்த சிரமம் இல்லை.

தமிழக பெண்கள் திருமதியானதும் தாலி, மெட்டி போன்றவைகளை அணிந்து கொள்கிறார்கள். நாங்கள் திருமணத்தின்போது வலது கை விரலில் ‘திருமண மோதிரம்’ அணிந்து கொள்வோம். அவர் வாழ்க்கைத் துணையாக இருக்கும் வரை அந்த மோதிரத்தை கழற்ற மாட்டோம். மோதிரத்தை மனைவி கழற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், அதை கழற்றி கணவரிடம் கொடுத்து வைத்திருக்க சொல்வார்கள். அதுபோல் கணவர் கழற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், மனைவியிடம் கொடுத்து வைத்திருப்பார். இங்குள்ள பெண்களில் பலர் மூக்குத்தி அணிந்திருக்கிறார்கள். அவர்களுக்கு அது அழகாக இருக்கிறது. எனக்கு அழகாக இருக்காது என நினைக்கிறேன். ஆனால் நானும் பொட்டு வைத்துக் கொள்வேன். கலாசாரரீதியாக இந்திய பெண்களுக்கும்- ரஷிய பெண்களுக்கும் வித்தியாசங்கள் இருந்தாலும் மனோரீதியான நெருக்கமும், பரஸ்பர மரியாதையும் அதிகம் இருக்கிறது”

கிட்டத்தட்ட நீங்களும் திருமண வயதை எட்டிவிட்டதால், காதலரை தேடிப் பிடித்து விட்டீர்களா?


“இதற்கு நான் ஆமாம் என்றும் சொல்லமாட்டேன். இல்லை என்றும் சொல்ல மாட்டேன்..”

இப்போது வெளிநாட்டினரை திருமணம் செய்துகொள்ளும் கலாசாரம் உலகம் முழுக்க வேகமாக பரவி வருகிறது. நீங்கள் தமிழர் யாரையாவது திருமணம் செய்துகொள்ள வாய்ப்பிருக் கிறதா?


“அவர் எந்த நாட்டினராக இருந்தாலும் அன்பானவராக இருக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. ஆனால் நான் என் நாட்டை சேர்ந்த ஒருவரைத்தான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். எனக்கு இன்னொரு ஆசை இருக்கிறது. தமிழ்நாட்டில் திருமண நிகழ்வு களும், சடங்குகளும் அற்புதமானதாக, வித்தியாசமானதாக இருக்கிறது. அதனால் ரஷியாவில் திருமணத்தை செய்துகொண்டு, கணவரோடு இங்கு வந்து தமிழக கலாசாரப்படியும் மண விழா நடத்த விரும்புகிறேன்”

உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா?

“இருக்கிறது. நான் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவள். தமிழ் ஆன்மிக இலக்கியங்களில் வரும் கடவுள் முருகனை பிடிக்கும். ரஷியாவில் முஸ்லிம் பெரியவர் ஒருவர் கொடுத்த கயிற்றை என் கையில் கட்டியிருக்கிறேன்”

புடவையில் நீங்கள் அதிக அழகாக இருக்கிறீர்களே. உங்களுக்கு புடவைகட்டத் தெரியுமா?

“புடவை கட்டுவது மிகவும் கஷ்டம். இரண்டு மூன்று முறை உடுத்தியிருக்கிறேன். என்னை புடவையில் பார்த்த பலரும் கடவுள் சரஸ்வதி தேவி போல் இருப்பதாக சொன்னார்கள். நான் இயற்கையாகவே ரொம்ப அழகு. அதனால் எனக்கு எல்லா உடையும் அழகாக இருக்கும். அந்த வகையில் புடவையும் எனக்கு அழகுதான்”

ரஷியாவில் நிலவும் சீதோஷ்ண நிலையால் அங்குள்ள பெரும்பாலான பெண்கள் மது அருந்துவதாக சொல்கிறார்கள்.. நீங்கள்..?

“புத்தாண்டு கொண்டாட்டம் மற்றும் விருந்துகளில் பங்கேற்கும்போது விரும்பினால் பெண்கள் சிறிதளவு ஒயின் பருகுவார்கள். எனக்கு அதுவும் பிடிப்பதில்லை. உங்கள் ஊரில் உள்ள இளநீர் சுவையாக இருக்கிறது. அதை நான் விரும்பிப் பருகுகிறேன்”

தமிழ் சினிமாக்களை பார்த்து ரசித்திருக்கிறீர்களா?

“பம்பாய் படம் பார்த்தேன். நன்றாக இருந்தது. பாகுபலி பார்த்தேன். பிரமிப்பாய் இருந்தது. சென்னை எக்ஸ்பிரஸ் லுங்கி டான்ஸ் நடனம் பிரமாதமாக இருந்தது. விட்டால் நானே ஆடிவிடுவேன்”

உங்களை கதாநாயகியாக நடிக்க அழைத்தால்..?


“நடிக்க சம்மதிப்பேன். ஆனால் எனக்கு நடனம் தெரியாது. அதற்காக நிறைய பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழ் சினிமாக்களில் நடித்தால், இன்னும் நன்றாக தமிழ் பேசுவேன்”

தமிழ் மொழி கல்வியில் உங்கள் லட்சியம் என்ன?


“தமிழின் பெருமைகளை நன்றாக கற்று உணரவேண்டும். தமிழின் சிறப்பை உலகெல்லாம் பறைசாற்றவேண்டும். செம்மொழியான தமிழால் நானும் பெருமை அடையவேண்டும்”

அன்னாவின் குரல் வளம் நன்றாக இருக்கிறது. தமிழ்ப் பெண்களின் தாலாட்டுப் பாடல் போன்று ரஷிய மொழி தாலாட்டுப் பாடல் ஒன்றை ராகமாக பாடினார். இனிமையாக இருந்தது. அவர் பாடி முடித்த பின்பு அதன் அர்த்தத்தை கேட்டபோது, “மூன்று கரடிகளையும், தொட்டிலில் கிடக்கும் குழந்தையையும் ஒப்புமைப்படுத்தி ராகமாக பாடப்படும் கிராமிய பாடல் அது” என்றார்.

தமிழில் ஒரு பாடலை பாடச்சொன்னபோது, “திருவிளக்கே திருவிளக்கே.. தேவி பராசக்தி திருவிளக்கே..” என்ற பாடலை தெய்வீக ராகத்துடன் இசைத்தார். அடுத்து, “இதுவரை இல்லாத உணர்வு இது.. இதயத்தில் உண்டான கனவு இது..” என்ற பாடலை ரசித்துப் பாடினார். இதமாக இருந்தது! அவர் தமிழ் உணர்வு நம்மை மகிழச் செய்தது! 

Next Story