ரெகுநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் சுகாதாரமற்ற தண்ணீரால் பரவி வரும் மர்ம காய்ச்சல்


ரெகுநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் சுகாதாரமற்ற தண்ணீரால் பரவி வரும் மர்ம காய்ச்சல்
x
தினத்தந்தி 1 April 2017 11:00 PM GMT (Updated: 2017-04-01T18:44:33+05:30)

திருப்புல்லாணி அருகே உள்ள ரெகுநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் சுகாதாரமற்ற தண்ணீரால் மர்ம காய்ச்சல் வேகமாக பரவிவருகிறது.

கீழக்கரை,

திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ரெகுநாதபுரத்திலும் அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக ஏராளமான ஆண்களும், பெண்களும், சிறுவர்–சிறுமிகளும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கிராமங்களில் வீட்டுக்குவீடு பரவி வரும் மர்ம காய்ச்சலுக்கு காரணம் தெரியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த மர்ம காய்ச்சலுக்கு கிராமங்களில் வினியோகம் செய்யப்படும் தண்ணீர் தான் காரணம் என்று புகார் தெரிவிக்கப்பட்டது. திருப்புல்லாணி அடுத்துள்ள ரெகுநாதபுரம் அருகே உள்ள சேதுநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் கிணறு மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு மேல்நிலை தொட்டிகளில் ஏற்றப்பட்டு கிராமங்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கோரிக்கை

இந்த குடிநீர் கிணறு சுத்தம் செய்யப்படாமல் குப்பைகள் நிறைந்து சுகாதாரக்கேடாக உள்ளதாக வினியோகம் செய்யப்படும் தண்ணீர் நிறம் மாறி சுகாதாரமற்ற நிலையில் உள்ளதாக இப்பகுதியினர் புகார் தெரிவித்துள்ளனர். கிணற்றில் செருப்புகள், பழைய பொருட்கள் ஆகியவை அதிகஅளவில் கிடக்கின்றன. எனவே, உடனடியாக இந்த குடிநீர் கிணற்றை சுத்தம் செய்து பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story