காரிமங்கலம் அருகே ரத்த காயங்களுடன் வாலிபர் பிணம் கொலையா? போலீசார் விசாரணை


காரிமங்கலம் அருகே  ரத்த காயங்களுடன் வாலிபர் பிணம் கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 1 April 2017 11:00 PM GMT (Updated: 2017-04-01T20:55:43+05:30)

காரிமங்கலம் அருகே ரத்த காயங்களுடன் வாலிபர் பிணமாக கிடந்தார்.

காரிமங்கலம்,

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் முக்குளம் ஊராட்சி செலமாரம்பட்டி சோமலிங்கப்பா ஏரியில் நேற்று காலை ஒரு வாலிபர் பிணம் கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஏராளமான பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். இதுதொடர்பாக காரிமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் தர்மபுரி துணை போலீஸ் சூப்பிண்டு சோமசுந்தரம், போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரவிக்குமார், சப்–இன்ஸ்பெக்டர் அந்தோணிசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த வாலிபர் காரிமங்கலம் அருகே உள்ள சே‌ஷப்பநாயுடு கொட்டாயை சேர்ந்த ரங்கசாமி மகன் பூவரசன் (வயது 25) என்பதும், கூலித்தொழிலாளி என்பதும் தெரியவந்தது.

சாவில் சந்தேகம்

மேலும் வாலிபரின் கழுத்து, காது மற்றும் உதட்டு பகுதிகளில் ரத்த காயங்கள் இருப்பதும், அவருக்கு அருகில் காலி மதுபாட்டில்கள் கிடப்பதும் தெரியவந்தது. இதையடுத்து தர்மபுரியில் இருந்து மோப்பநாய் பைரவன் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய், வாலிபரின் பிணம் கிடந்த இருந்த இடத்தில் இருந்த 50 மீட்டர் தூரம் வரை சென்று திரும்பியது.

மேலும் தடயவியல் துணை போலீஸ் சூப்பிரண்டு நவநீதம் மற்றும் போலீசார் அந்த இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களில் உள்ள கைரேகைகளை பரிசோதனை செய்தனர். இதையடுத்து வாலிபர் பூவரசனின் உடலை பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த பூவரசனின் தந்தை தனது மகனின் சாவில் சந்தேகம் உள்ளது என காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

போலீசார் விசாரணை

அதன்பேரில் காரிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரவிக்குமார் வழக்குப்பதிவு செய்து, வாலிபரை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார். ஏரியில் வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story