பந்தலூர் அருகே மான் இறைச்சியை சமைக்க முயன்ற 3 பேருக்கு அபராதம்
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள சேரம்பாடி வனப்பகுதியில் மான் இறைச்சியை சமைக்க முயன்ற 3 பேருக்கு அபராதம்
பந்தலூர்,
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள சேரம்பாடி வனப்பகுதியில் செந்நாய்கள் தாக்கி இறந்த கடமானின் உடலை சிலர் எடுத்து சென்றதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் தேவாலா ரேஞ்சர் சரவணன் தலைமையில் வனத்துறையினர் அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். அப்போது ஒரு வீட்டில் 3 பேர் கடமானின் இறைச்சியை சமைக்க முயன்றது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து வனத்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் (வயது 67), தமிழ்நாதன் (49), கனகரத்தினம் (47) ஆகியோர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து கூடலூர் கோட்ட வன அலுவலர் திலீப் உத்தரவின் பேரில் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மான் இறைச்சியை எடுத்து வந்து சமைக்க முயன்றதற்காக 3 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.