3–வது நாளாக லாரிகள் வேலை நிறுத்தம்: இளநீர், தென்னை நார் பொருட்கள் தேக்கம்
3–வது நாளாக லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக பொள்ளாச்சியில் இளநீர் மற்றும் தென்னை நார் பொருட்கள் தேக்கம் அடைந்தன. இதனால் தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர்.
பொள்ளாச்சி,
வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கட்டண உயர்வு, பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரி உயர்வு ஆகியவற்றை திரும்ப பெற வேண்டும். பழைய வாகனங்களுக்கு வேக கட்டுப்பாடு கருவி பொருத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
வேலை நிறுத்த போராட்டம் காரணமாக பொள்ளாச்சி தாலுகாவில் 2800 லாரிகள் ஓடவில்லை. லாரி உரிமையாளர்கள் நேற்று 3–வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் காய்கறிகள் தேக்கம் அடைந்தன. லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக 3 நாட்களில் ரூ.15 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
வேலை இழப்புமேலும் லாரி தொழிலை நம்பி உள்ள தொழிலாளர்களும் வேலை இழந்து உள்ளனர். லாரிகள் ஓடாததால் பொள்ளாச்சியில் இருந்து வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு இளநீர் கொண்டு செல்வது பாதிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து இளநீர் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ரத்தினம் கூறியதாவது:–
தற்போது மழை இல்லாததால் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் இளநீர் உற்பத்தி குறைந்து விட்டது. வழக்கமாக ஒரு நாளைக்கு 75 லாரிகளுக்கு மேல் பொள்ளாச்சியில் இருந்து வெளி இடங்களுக்கு கொண்டு செல்லப்படும். தற்போது வறட்சியின் காரணமாக 60 லாரிகளில் தான் கொண்டு செல்லப்பட்டது.
தேக்கம்இந்த நிலையில் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக இளநீரை வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்வது பாதிக்கப்பட்டது. இதனால் லாரிகள் மற்றும் குடோன்களில் இளநீர் தேக்கம் அடைந்துள்ளன. ஒரு சில இடங்களில் இளநீர் ஏற்றப்பட்டு, லாரிகள் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் இளநீர் பறிக்கும் மற்றும் ஏற்றி, இறக்கும் தொழிலாளர்கள் சுமார் 1000 பேர் வேலை இழந்து உள்ளனர். லாரிகள் ஓடாததால் இளநீர் வர்த்தகம் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.
இதுமட்டுமின்றி தென்னை நார் பொருட்கள், தென்னை நார் கட்டி போன்றவையும் தேக்கம் அடைந்துள்ளன. தென்னை நார் தொழிலை நம்பி உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர். மேலும் பொருட்கள் வெளியே செல்லாமல் தேக்கம் அடைந்ததால் விலை குறைந்து விட்டது. இதனால் பணபுழக்கமும் குறைந்து விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
போக்குவரத்து பாதிப்புஇந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சரக்கு ஏற்றிக் கொண்டு கேரளாவுக்கு சென்ற லாரிகளை லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் சிலர் பொள்ளாச்சியை அடுத்த நல்லூரில் தடுத்து நிறுத்தினார்கள். சுமார் 50 லாரிகள் வரை ரோட்டோரத்தில் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தி, லாரிகளை அங்கிருந்து செல்ல நடவடிக்கை எடுத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.