உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து 119 மதுக்கடைகள் மூடப்பட்டன மது பிரியர்கள் அலைமோதல்


உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து 119 மதுக்கடைகள் மூடப்பட்டன மது பிரியர்கள் அலைமோதல்
x
தினத்தந்தி 1 April 2017 11:00 PM GMT (Updated: 2017-04-02T02:09:47+05:30)

உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் 119 மதுக்கடைகள் மூடப்பட்டன.

திருச்சி,

நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் இருபுறமும் 500 மீட்டர் தூரத்துக்குள் அமைந்துள்ள மதுக்கடைகளை மார்ச் 31-ந் தேதிக்குள் மூட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் இருபுறமும் 500 மீட்டர் தூரத்துக்குள் அமைந்துள்ள மதுக்கடைகள் மூடப்பட்டன. திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 232 மதுக்கடைகள் செயல்பட்டு வந்தன. இவற்றில் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு மூலம் சில கடைகள் படிப்படியாக மூடப்பட்டன.

மதுக்கடைகள் மூடப்பட்டன

இந்தநிலையில் உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, திருச்சி மாவட்டத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த 204 கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் நேற்று ஒரேநாளில் 119 மதுக்கடைகள் அதிரடியாக மூடப்பட்டுள்ளன. இவற்றில் திருச்சி மாநகரத்துக்கு உட்பட்ட பகுதிகளான மத்திய பஸ்நிலையம் அருகே, காந்திமார்க்கெட், மதுரைரோடு, கருமண்டபம் ஆகிய பகுதிகளில் சாலையோரம் இருந்த கடைகள் மற்றும் புதுக்கோட்டை நெடுஞ்சாலை, கரூர் நெடுஞ்சாலை உள்பட பல்வேறு இடங்களில் இருந்த கடைகள் என மாநகரில் 45 மதுக்கடைகளும், திருச்சி புறநகர் பகுதிகளில் 74 மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் மாநகரில் திறக்கப் பட்டிருந்த ஒருசில டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதியது.

ஊழியர்கள் வேலை இழப்பு

இதன் மூலம் தற்போது திருச்சி மாவட்டத்தில் 85 கடைகள் மட்டுமே செயல்பட்டு வருவதாகவும் மூடப்பட்ட கடைகளுக்கு மாற்று இடம் தேர்வு செய்தபிறகே ஏற்கனவே இருந்த கடைகளில் இருந்து பொருட்களை அப்புறப்படுத்த முடியும் என்றும் டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். திருச்சி மாவட்டத்தில் பெரும்பாலான மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் டாஸ்மாக் ஊழியர்கள் தற்போது வேலை இழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மணப்பாறை

இதில் மணப்பாறை, மருங்காபுரி ஆகிய இரு தாலுகா பகுதிகளிலும் செயல்பட்டு வந்த 30 டாஸ்மாக் கடைகளில் தற்போது 22 கடைகள் மூடப்பட்டுள்ளன. 8 கடைகள் மட்டுமே திறக்கப்பட்டு உள்ளன. நேற்று மணப்பாறை நகர் பகுதியில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டதால் மது பிரியர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். கடைகள் மூடப்பட்டாலும் பல்வேறு இடங்களிலும் அனுமதியின்றி பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்கப்பட்ட மதுபாட்டில்களை மது பிரியர்கள் வாங்கிச் சென்றனர்.

இதேபோல் லால்குடி பகுதியில் லால்குடி-பூவாளூர் சாலையில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையும், வாளாடி, ஆந்தரை பகுதிகளில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. இதனால் லால்குடியில் வடக்கு அய்யன்வாய்க்கால் கரையோரத்தில் ஒரு டாஸ்மாக் கடை மட்டும் செயல்படுகிறது. எனவே இந்த டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் வாங்க மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. இதில் மது பிரியர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் டாஸ்மாக் கடை ஊழியர்கள் கடை முன்பு சவுக்கு கட்டைகளால் தடுப்புகள் அமைத்தனர். பின்னர் மது பிரியர்கள் வரிசையில் நின்று மது பாட்டில்களை வாங்கி சென்றனர். 

Next Story