நாங்குநேரி அருகே வேன்–கார் மோதல்: பள்ளிக்கூட குழந்தைகள் உள்பட 11 பேர் காயம்


நாங்குநேரி அருகே வேன்–கார் மோதல்: பள்ளிக்கூட குழந்தைகள் உள்பட 11 பேர் காயம்
x
தினத்தந்தி 1 April 2017 10:15 PM GMT (Updated: 2017-04-02T02:13:38+05:30)

நாங்குநேரி அருகே வேனும், காரும் மோதிக் கொண்ட விபத்தில் பள்ளிக்கூட குழந்தைகள் உள்பட 11 பேர் காயம் அடைந்தனர்.

நாங்குநேரி,


நெல்லை மாவட்டம் நாங்குநேரி–வள்ளியூர் இடையே உள்ள வாகைகுளம் வழியாக விஜயநாராயணத்தை நோக்கி, நேற்று காலை பள்ளிக்கூட குழந்தைகளை ஏற்றிக் கொண்டு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. நான்கு வழிச்சாலையில் இருந்து பட்டர்புரம் நோக்கி திரும்பும் போது, அந்த வழியாக நாகர்கோவிலில் இருந்து நெல்லை நோக்கி சென்ற காரும், அந்த வேனும் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன. இதனால் வேனும், காரும் நொறுங்கின.

இந்த விபத்தில் வேன் டிரைவர் குமரேசன் (வயது 30) மற்றும் பள்ளிக்கூட குழந்தைகளான ராஜேசுவரி (14), சுகப்பிரியா (11), மகராசி பிரியா (13), ஹரிணி (14), லிக்ஸ்டன் (13), வருண்ராஜ் (14), காயத்ரி (14) ஆகியோரும், காரில் வந்த நாகர்கோவிலை சேர்ந்த அனந்த பெருமாள் (55), சுபாகர வேல் (48), சுந்தர் சிங் (48) ஆகியோரும் காயம் அடைந்தனர்.

போலீசார் விசாரணை


தகவல் அறிந்ததும் நாங்குநேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். காயம் அடைந்த 11 பேரையும் மீட்டு, நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களில் மாணவி ராஜேஸ்வரி மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியிலும், காரில் வந்தவர்கள் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story