வெயிலில் வெளியே போனால்...


வெயிலில் வெளியே போனால்...
x
தினத்தந்தி 2 April 2017 8:23 AM GMT (Updated: 2 April 2017 8:23 AM GMT)

கோடை காலம் நெருங்கும் முன்பே ‘சன் ஸ்கிரீன்’ பற்றிய பேச்சு அதிகமாக அடிபடத்தொடங்கிவிடுகிறது.

கோடை காலம் நெருங்கும் முன்பே ‘சன் ஸ்கிரீன்’ பற்றிய பேச்சு அதிகமாக அடிபடத்தொடங்கிவிடுகிறது. ஏன்என்றால் கோடை வெயிலின் தாக்குதலில் இருந்து பெரும்பாலான பெண்கள் தங்கள் சருமத்தை காக்க இந்த சன்ஸ்கிரீன் கிரீம்களைத்தான் நம்பி இருக் கிறார்கள்.

சன்ஸ்கிரீனை வாங்கும்போதும், பயன்படுத்தும் போதும் பெண்கள் கவனிக்க வேண்டியவை:

* 50 முதல் 100 வரையுள்ள ‘எஸ்.பி.எப்’ (சன் புரடெக்‌ஷன் பேக்டர்) அடங்கிய சன்ஸ்கிரீன் கிரீம் வகைகள் கிடைக்கும். அதிக ‘எஸ்.பி.எப்’ கொண்டவைகளை பார்த்து வாங்குங்கள். அதனை பூசிக்கொண்டால், குறிப்பிட்ட அளவு வரை அல்ட்ரா வயலட் கதிர்களின் தாக்குதலில் இருந்து சருமத்தை பாதுகாக்கலாம்.

* வெயிலில் வெளியே செல்வதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்பே பூசி விடுங்கள். சருமத்தோடு சேர்ந்து இது செயல்பட பத்து நிமிடங்கள் தேவை. வெயிலில் வெளியே போய்விட்டு, வீடு திரும்பியதும் முதல் வேலையாக அதை துடைத்து நீக்கி விடுங்கள்.

*  வெயிலில் இருந்து முகத்திற்கு மட்டுமே பாதுகாப்பு தேவை என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் கழுத்து, கழுத்தின் பின்பகுதி, கைகள், கால் பாதங்கள் போன்றவைகளிலும் வெயில் பாதிக்கும். அவைகளும் சன்ஸ்கிரீன் மூலம் பாதுகாக்கப்பட வேண்டிய பகுதிகள்தான். அங்கும் பூசுங்கள்.

* ஒருமுறை வெயிலில் போய்விட்டு, திரும்பியதும் கிரீமை துடைத்து அப்புறப்படுத்திவிட்டு– அடுத்து வெயிலில் செல்லவேண்டியதிருந்தால் மீண்டும் பூசிக்கொள்ளுங்கள்.

* சருமத்தை மூன்று முக்கிய வகைகளாக பிரிக்கலாம். அவை: எண்ணெய்த் தன்மை கொண்டது. வறண்டது. சாதாரண மானது. இதில் உங்கள் சருமம் எந்த வகையானது? ஸ்கின் டோன் எப்படிப்பட்டது? என்பதை அறிந்து அதற்குதக்கபடியான சன்ஸ்கிரீனை தேர்ந்தெடுக்கவேண்டும்.

* வறண்ட சருமம் கொண்டவர்கள் லோ‌ஷனை பயன்படுத்துவது நல்லது. கிரீமைவிட லோ‌ஷன் அதிக எண்ணெய்த்தன்மை கொண்டதாக இருப்பதால், சருமம் அதிகம் வறண்டு போகாமலும் பாதுகாக்கும்.

* எண்ணெய்த்தன்மையான சருமம் கொண்டவர்கள் கிரீம் அல்லது ஜெல் வடிவிலான சன்ஸ்கிரீனை பயன்படுத்தலாம். சன்ஸ்கிரீன் பயன்படுத்தும் போது அதோடு சேர்த்து அழகுக்காக வேறு எந்த கிரீமும் பயன்படுத்தவேண்டியதில்லை. சில வகை சன்ஸ்கிரீன் கிரீம்களில் ‘பேர்னெஸ்’ கிரீம் கலந்தும் விற்பனை செய்கிறார்கள். அதனை பயன்படுத்தும் போது பவுண்ட்டே‌ஷனும் உபயோகிக்கலாம்.

* காலாவதி தேதியை பார்த்து வாங்குங்கள். பழையதை வாங்கி பயன்படுத்தி விடாதீர்கள்.

* கோடைகாலத்தில் மட்டுமல்ல,  இதர பருவ காலங்களிலும் வெயிலில் வெளியே செல்லும்போது சன்ஸ்கிரீன் பயன்படுத்துங்கள்.

* வீட்டு பொருட்களை பயன்படுத்தியும் சருமத்தை  பாதுகாக்கலாம். கற்றாழை சாறை எடுத்து சருமத்தில் தேய்ப்பது நல்ல பலனைத்தரும்.

* வெயிலில் வெளியே போய்விட்டு வீடு திரும்பியதும், கடலை மாவில் தயிர் கலந்து முகத்தில் பூசி, பத்து நிமிடங்கள் கழித்து கழுவிவிடுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.

* சிறுபயறு மாவில் எலுமிச்சை சாறு கலந்து பிசைந்து, முகத்தில் பூசி, உலர்ந்த பின்பு கழுவுவதும் சருமத்தை ஜொலிக்கச் செய்யும்.

Next Story