கீழ் மொரப்பூர் காப்புக்காட்டில் மான் வேட்டையாடிய 2 வாலிபர்கள் கைது வனப்பகுதியில் வலை விரித்தவரும் சிக்கினார்
கீழ் மொரப்பூர் காப்புக்காட்டில் மான் வேட்டையாடிய 2 வாலிபர்களை வனத்துறையினர் கைது செய்தனர்.
அரூர்,
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் வனச்சரகர் கிருஷ்ணன் தலைமையில் வனத்துறையினர் கீழ்மொரப்பூர் காப்புக்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தென்பெண்ணையாறு சரகத்தில் 2 பேர் மானை வேட்டையாடி கறி வெட்டிக்கொண்டு இருந்தனர். அவர்களை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள வெள்ளிமலை கிராமத்தை சேர்ந்த அல்லிமுத்து(வயது27), வேலூர் மாவட்டம் வெல்லண்டராமம் கிராமத்தை சேர்ந்த கோபி (19) என்பது தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் வனப்பகுதியில் மானை வேட்டையாடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 கிலோ கறி, கத்தி, கம்பி வலை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
வலை விரித்தவர் கைதுபாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பூதநத்தம் கவரமலை வனப்பகுதியில் வனச்சரக அலுவலர் கிருஷ்ணன் தலைமையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காப்புக்காட்டில் மான் வேட்டையாட 2 பேர் கம்பி வலைகள் கட்டிக்கொண்டு இருப்பது தெரியவந்தது. வனத்துறையினரை அவர்களை பிடிக்க முயன்ற போது ஒருவர் தப்பி ஓடி விட்டார். மற்றொருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அம்மாபபாளையம் கிராமத்தை சேர்ந்த கோபால் (வயது23) என்பதும், தப்பி ஓடியவர் அரூர் அருகே உள்ள சோலைக்கொட்டாய் பகுதியை சேர்ந்த ராஜி (30) என்பதும் கம்பி வலை விரித்து மானை வேட்டையாட முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து கோபாலை வனத்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள், கம்பி வலைகள், டார்ச்லைட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய ராஜியை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.