திருப்பூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய மது பிரியர்கள்


திருப்பூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய மது பிரியர்கள்
x
தினத்தந்தி 2 April 2017 11:00 PM GMT (Updated: 2017-04-03T00:13:37+05:30)

திருப்பூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் நீண்ட வரிசையில் ஒரு மணி நேரம் காத்திருந்து மது வாங்கி சென்றனர்.

திருப்பூர்,

தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலை பகுதிகளில் 500 மீட்டர் தொலைவுக்குள் உள்ள 3 ஆயிரத்து 400 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் இருந்த 230 டாஸ்மாக் கடைகளில் 164 கடைகளும், அதனுடன் இணைந்த பார்களும் மூடப்பட்டு விட்டன. பார் நடத்த எப்.எல்.2 உரிமம் பெற்ற 22 கிளப்களில் 18 கிளப்களில் உள்ள பார்களும், எப்.எல்.3 உரிமம் பெற்ற 27 நட்சத்திர ஓட்டல்களில் 25 நட்சத்திர ஓட்டல்களின் பார்களும் மூடப்பட்டன.

இதன்காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் தற்போது 66 டாஸ்மாக் கடைகள், 4 கிளப்கள் மற்றும் 2 நட்சத்திர ஓட்டல்களில் மட்டுமே மது கிடைக்கும். குறிப்பாக தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூர் மாவட்டத்தில் பண்டிகை காலங்கள் மற்றும் விழாக்காலங்கள், மதுக்கடைகளுக்கான விடுமுறை நாட்களுக்கு முந்தைய நாட்களில் மது விற்பனை அதிகமாக நடைபெறுவது வழக்கம்.

அலை மோதிய கூட்டம்

தற்போது மதுக்கடைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டாலும் மது பிரியர்கள் டாஸ்மாக் கடைகளை தேடிச் சென்று மதுவாங்கி வருகிறார்கள். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் மதியம் 12 மணிக்கு டாஸ்மாக் கடை திறக்கும் முன்பே அங்கு மதுப்பிரியர்கள் கூடிவிட்டனர். இதனால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 66 டாஸ்மாக் கடைகளிலும் மது பிரியர்களின் கூட்டம் அலைமோதியது.

கடையை திறந்ததும், மது வாங்க அவர்கள் முண்டியடித்து சென்றதால், சில இடங்களில் மதுபிரியர்களுக்குள் தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு இருந்த மதுப்பிரியர்களை சமாதப்படுத்தினார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நீண்ட வரிசை

பின்னர், ஒவ்வொரு மது கடைகள் முன்பும் விஸ்கி, பிராந்தி, ரம் போன்ற மதுவகைகள் வாங்க ஒரு வரிசையும், பீர் வாங்க மற்றொரு வரிசையும் என்று போலீசார் ஒழுங்குபடுத்தினார்கள். இதில் நீண்ட வரிசையில் சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்து மது வாங்கி சென்றனர்.

இங்கு இரு சக்கர வாகனங்களில் வந்த மதுபிரியர்கள் தங்கள் வாகனங்களை கடைமுன்பு ஆங்காங்கே நிறுத்தியதால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் பிரச்சினை ஏற்படுவதை தடுக்க ஒரு போலீஸ் ஏட்டு தலைமையில் 2 போலீசார் ஒரு டாஸ்மாக் கடைக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story