லாரிகள் வேலை நிறுத்தம் எதிரொலி: ரெயில் நிலையத்தில் குவியும் பின்னலாடை பண்டல்கள்


லாரிகள் வேலை நிறுத்தம் எதிரொலி: ரெயில் நிலையத்தில் குவியும் பின்னலாடை பண்டல்கள்
x
தினத்தந்தி 2 April 2017 10:30 PM GMT (Updated: 2017-04-03T00:13:38+05:30)

லாரிகள் வேலை நிறுத்தம் எதிரொலியாக திருப்பூர் ரெயில் நிலையத்தில் பின்னலாடை பண்டல்கள் குவிந்து வருகின்றன. அதே நேரம் ரூ.400 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்,

லாரிகளுக்கு இன்சூரன்சு தொகை அதிகரிப்பு, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கட்டண உயர்வு போன்றவற்றை திரும்ப பெறவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 30–ந் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று 4–வது நாளாக லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் தொடர்ந்து நடந்து வருகிறது.

இதன்காரணமாக காய்கறிகள், மளிகை பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளன. மேலும் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகிறார்கள்.

பின்னலாடை சரக்குகள்

அதே நேரம் திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகள் பண்டலாக கட்டப்பட்டு லாரிகள் மூலமே வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக விமான நிலையங்களுக்கும், சென்னை, மும்பை, தூத்துக்குடி போன்ற துறைமுகங்களுக்கும் தினமும் கொண்டு செல்லப்படுகின்றன. தற்போது, லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக பின்னலாடை சரக்குகளை உரிய நேரத்தில் வினியோகம் செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது.

இதனால் லாரி புக்கிங் அலுவலகங்களில் பின்னலாடை சரக்குகள் தேங்கிக்கிடக்கின்றன. இதை தவிர்க்க, தற்போது தொழில்துறையினர் ரெயில்கள் மூலம் பின்னலாடை சரக்குகளை அனுப்ப தொடங்கி உள்ளனர். இதன்காரணமாக திருப்பூர் ரெயில் நிலையத்தில் வழக்கத்துக்கு மாறாக பின்னலாடை பண்டல்கள் குவியல் குவியலாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் அனைவரும் ரெயில்களில் சரக்குகளை அனுப்ப புக் செய்வதால், தற்போது ரெயில்நிலைய புக்கிங் அலுவலகம் பரபரப்பாக இயங்க தொடங்கி உள்ளது.

ரூ.400 கோடி வர்த்தகம் பாதிப்பு

மேலும் காங்கேயம் பகுதியில் இருந்து எண்ணெய், அரிசி மற்றும் உடுமலை பகுதியில் இருந்து விவசாய விளைபொருட்கள், அனுப்பர்பாளையம் பகுதியில் இருந்து பாத்திரங்கள் போன்றவற்றை வெளியூர்களுக்கு கொண்டு செல்வது முற்றிலும் முடங்கி உள்ளன. அத்துடன், திருப்பூர் ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயில்களில் கொண்டு வரப்பட்ட சரக்குகளை இறக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 40 ஆயிரம் பேர் வேலையிழப்பை சந்தித்துள்ளனர். இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.100 கோடி வீதம் கடந்த 4 நாட்களில் ரூ.400 கோடி வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்தம் தொடர்ந்தால் மேலும் பல கோடி இழப்பு ஏற்படும் என்று தொழில்துறையினர் கவலை அடைந்துள்ளனர்.


Next Story