அடிக்கடி குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை போலீசார் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் முதல்–மந்திரி சித்தராமையா பேச்சு


அடிக்கடி குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை போலீசார் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் முதல்–மந்திரி சித்தராமையா பேச்சு
x
தினத்தந்தி 2 April 2017 9:30 PM GMT (Updated: 2 April 2017 6:46 PM GMT)

அடிக்கடி குற்றங்களில் ஈடுபடுபவர்களை போலீசார் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும், குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டியது அவசியம் என்றும் சித்தராமையா கூறினார்.

பெங்களூரு,

அடிக்கடி குற்றங்களில் ஈடுபடுபவர்களை போலீசார் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும், குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டியது அவசியம் என்றும் சித்தராமையா கூறினார்.

பொறுமை அவசியம்

போலீஸ் கொடி நாள் விழா பெங்களூரு கோரமங்களாவில் உள்ள கர்நாடக மாநில ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் முதல்–மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு, சிறப்பாக செயல்படும் போலீசாருக்கு முதல்–மந்திரி பதக்கத்தை வழங்கி கவுரவித்தார். பின்னர் அவர் பேசியதாவது:–

அரசாங்கத்தில் போலீஸ் துறை மிக முக்கியமான பாகம். சமுதாயத்தில் மக்கள் நிம்மதியாக இருக்க வேண்டுமென்றால் போலீசார் நேர்மையாக பணியாற்ற வேண்டியது அவசியம். போலீசார் ஒவ்வொருவருக்கும் பொறுமை அவசியம் இருக்க வேண்டும். இவை இருந்தால் தான் சிறப்பான போலீஸ்காரர்களாக உருவாக முடியும்.

குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பது...

சமுதாயத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டுமென்றால் போலீசார் நல்ல முறையில் பணியாற்ற வேண்டும். சமுதாயத்தில் நல்லவர்கள், கெட்டவர்கள் இருக்கிறார்கள். நல்லவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது அரசின் பொறுப்பு ஆகும். மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுப்பவர்கள், ஏமாற்றுபவர்கள், கொலை, திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்களை போலீசார் கண்காணிக்க வேண்டும்.

இதன் மூலம் குற்றங்களை குறைக்க வேண்டும். ஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும் அடிக்கடி குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் பற்றிய விவரங்கள் இருக்கின்றன. அத்தகையவர்களை போலீசார் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். குற்றம் நடைபெற்ற பிறகு தவறு செய்தவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை வழங்குவது ஒரு பாகம். அதைவிட குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பது மிக முக்கியம் ஆகும்.

1178 பேருக்கு பதக்கம்

1952–ம் ஆண்டு போலீஸ் சட்டம் அமலுக்கு வந்தது. அன்று முதல் போலீஸ் கொடி நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அப்போது முதல் சிறப்பாக செயலாற்றும் போலீசாருக்கு முதல்–மந்திரி பதக்கம் வழங்கும் சம்பிரதாயம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நேர்மையாகவும், ஈடுபாட்டுடனும் பணியாற்றும் போலீசாருக்கு இந்த பதக்கம் வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு 117 பேருக்கு முதல்–மந்திரி பதக்கம் வழங்கப்படுகிறது. போலீசார் பணி நெருக்கடியில் பணியாற்றுகிறார்கள். இதில் இருந்து விடுபட்டு தைரியமாக தங்களின் பணியை ஆற்ற வேண்டும். சேவையாற்றும் காலத்தில் பொறுப்பு அதிகமாக உள்ளது. நன்றி உணர்வுடன் பணியாற்ற வேண்டும். இவ்வாறு செயலாற்றினால் பணியில் இன்னும் நேர்மை அதிகமாக இருக்கும்.

களங்கம் இருந்திருக்கும்

போலீசார் அனைவருமே சரியாக பணியாற்றுவது இல்லை என்று சொல்ல முடியாது. சில அதிகாரிகள் திறமையாக பணியாற்றி முக்கியவான வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடித்து உள்ளனர். ஏ.டி.எம். மையத்தில் வங்கி பெண் அதிகாரி மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஒருவேளை அவர் கைது செய்யப்படாமல் இருந்திருந்தால் போலீஸ் துறை மீது அந்த களங்கம் நிரந்தரமாக இருந்திருக்கும்.

பெங்களூருவில் சமீபத்தில் ஒரு பெண் தன்னை சிலர் கற்பழித்தாக புகார் கூறினார். இது பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால் விசாரணையில் அவர் நாடகமாடியது அம்பலமானது. இது மக்கள் முன் எடுத்து வைக்கப்பட்டது. இன்னொரு வழக்கில் பழிவாங்கும் நோக்கத்தில் அப்பா–மகள் சேர்ந்து கற்பழிப்பு புகார் கூறினர். அதிலும் போலீசார் சாணக்கியத்தனமாக செயல்பட்டு உண்மையை கண்டறிந்தனர். அது கற்பழிப்பு சம்பவம் இல்லை என்பது தெரியவந்தது.

ரவுடிகளுக்கு தண்டனை

இத்தகைய சம்பவங்களில் உண்மைகளை வெளியே கொண்டு வருவதின் மூலம் போலீசார் மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கிறது. ரவடிகள் ஈடுபடும் குற்றங்களில் சாட்சி சொல்ல மக்கள் பயப்படுகிறார்கள். இதனால் அதிகமான ரவுடிகளுக்கு தண்டனை கிடைப்பது இல்லை. அடிக்கடி குற்றங்களில் ஈடுபடுபவர்கள், தங்களின் அனுபவத்தின் அடிப்படையில் வக்கீல் இல்லாமலேயே தாங்களே வாதிடும் அளவுக்கு உயர்ந்து இருக்கிறார்கள்.

அத்தகையவர்களுக்கு தண்டனை பெற்று கொடுப்பது, சட்டத்தின் மீது பயத்தை உண்டாக்குவது போலீசாரின் பணி ஆகும். போலீசார் குறிப்பிட்ட கால இடைவேளையில் மக்களுடன் நல்லுறவு ஏற்படுத்தும் கூட்டங்களை நடத்த வேண்டும். பொதுமக்களுடன் தோழமையுடன் பழக வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

இந்த விழாவில் போலீஸ் மந்திரி பரமேஸ்வர், தலைமை செயலாளர் சுபாஷ்சந்திர குந்தியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story