மணல் கொள்ளைக்கு எதிராக மாணவர்கள் போராட வேண்டும் ஆர்.நல்லக்கண்ணு பேட்டி


மணல் கொள்ளைக்கு எதிராக மாணவர்கள் போராட வேண்டும் ஆர்.நல்லக்கண்ணு பேட்டி
x
தினத்தந்தி 2 April 2017 11:00 PM GMT (Updated: 2017-04-03T02:17:10+05:30)

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடியது போல, மணல் கொள்ளையை தடுக்கவும் மாணவர்கள் போராட வேண்டும் என்று ஆர். நல்லக்கண்ணு கூறினார்.

திருச்சி,

மணல் கொள்ளையை தமிழக அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஸ்ரீரங்கத்தில் நேற்று இரவு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் திருச்சி மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் சண்முகம், பொருளாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

இதில் திருச்சி மாவட்ட செயலாளர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நல்லக்கண்ணு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குடிநீர் பஞ்சம்

தமிழகத்தில் கடுமையான வறட்சியால் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. ஒரு குடம் தண்ணீர் 50 ரூபாய் வரை விற்கப்படுகிறது. கடுமையான தண்ணீர் பற்றாக்குறைக்கு முக்கிய காரணம் தமிழகத்தில் உள்ள 33 ஆறுகளிலும் மணலை கொள்ளையடித்தது தான். அதிலும் 19 மாவட்டங்களுக்கு நீராதாரமாக இருக்கிற காவிரி ஆறு மணல் கொள்ளையால் வறண்டு விட்டது. ஒரு வருடத்திற்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மணலை கொள்ளையடிக்கிறார்கள். தமிழகத்தில் எடுக்கும் மணல், அண்டை மாநிலங்களுக்கே கொண்டு செல்லப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் 2015-ம் ஆண்டுக்கு பின்னர் மணல் அள்ளுவதற்கு 24 குவாரிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு குறிப்பிட்ட குவாரியில் மட்டும் 500 லாரிகளில் மணல் அள்ளப்படுகிறது. அதை உடனடியாக தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

மாணவர்கள் போராட வேண்டும்

மணல் கொள்ளைக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்டு கட்சி தொடர்ந்து போராடும். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் போராடியது போல, மணல் கொள்ளையை தடுக்கவும் போராட வேண்டும். டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளை பிரதமர் உடனடியாக நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவுபடி மூடப்பட்ட மதுக் கடைகளை வேறு இடத்தில் திறக்க அனுமதிக்க கூடாது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story