தஞ்சையில் 6-வது நாளாக விவசாயிகள் முற்றுகை போராட்டம்


தஞ்சையில் 6-வது நாளாக விவசாயிகள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 3 April 2017 4:30 AM IST (Updated: 3 April 2017 2:18 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சையில் 6-வது நாளாக விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை ஜி.கே.வாசன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

தஞ்சாவூர்,

காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கடந்த 28-ந்தேதி முதல் தொடர் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இரவு, பகலாக நடைபெறும் இந்த போராட்டம் நேற்று 6-வது நாளாகவும் நீடித்தது. காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும். காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை ரத்து செய்யக்கூடாது. மேகதாதுவில் அணை கட்டுவதை தடை செய்ய வேண்டும். காவிரி டெல்டா பகுதியில் எண்ணெய், எரிவாயு எடுக்கக்கூடாது.

காவிரி சமவெளி பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும். அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு உரிய வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

விவசாயிகள் பங்கேற்பு

போராட்டத்தில் காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன், தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அயனாவரம் முருகேசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மணிமொழியன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் வக்கீல் நல்லதுரை, தமிழர் தேசிய பேரியக்க மாவட்ட செயலாளர் குழ.பால்ராசு, இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் சிமியேன்சேவியர்ராஜ், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைமை ஆலோசகர் பாரதிசெல்வன் மற்றும் பல்வேறு விவசாய அமைப்புகளை சேர்ந்தவர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

விவசாயிகளின் தொடர் போராட்டத்தையடுத்து தஞ்சை கலெக்டர் அலுவலகம் பகுதியில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

ஜி.கே.வாசன் ஆதரவு

தொடர் முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மற்றும் காவிரி உரிமை மீட்புக்குழுவினரை த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நேற்று நேரில் சென்று சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.


Next Story