அம்பையில் கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு


அம்பையில் கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 2 April 2017 10:45 PM GMT (Updated: 2017-04-03T02:20:00+05:30)

அம்பையில் கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

அம்பை,


சங்கரன்கோவில் புதுமனை 1–வது தெருவை சேர்ந்தவர் சிவஞானம் மகன் மாரியப்பன் (வயது 35). இவர் தனக்கு சொந்தமான காரில் நெல்லையில் நடந்த தனது உறவினர் திருமணத்துக்கு சென்றுவிட்டு, பாபநாசம் செல்வதற்காக நேற்று மாலையில் உறவினர்களுடன் அம்பை நோக்கி வந்து கொண்டிருந்தார். அம்பையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே வந்த போது, மாரியப்பன் ரோட்டோரம் காரை நிறுத்திவிட்டு டீ குடிக்கச் சென்றார். அவருடன் வந்தவர்களும் காரில் இருந்து இறங்கி மாரியப்பனுடன் டீ குடித்துக் கொண்டிருந்தனர். கார் நிறுத்தியிருந்த இடம் சற்று தாழ்வான பகுதி என்பதால், கார் திடீரென நகர்ந்து அங்கிருந்த பாழடைந்த கிணற்று தடுப்புச் சுவரின் மீது லேசாக மோதியது. சிறிது நேரத்தில் கார் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனை பார்த்து மாரியப்பன் அதிர்ச்சி அடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினரும் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். மேலும் இதுபற்றி அம்பை தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தண்ணீரை பீய்ச்சி அடித்து காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story