பிரிவினைவாதிகளை ஒடுக்க தவறிய ஜம்மு–காஷ்மீர் முதல்–மந்திரி பதவி விலக வேண்டும் சுப்பிரமணிய சாமி சொல்கிறார்


பிரிவினைவாதிகளை ஒடுக்க தவறிய ஜம்மு–காஷ்மீர் முதல்–மந்திரி பதவி விலக வேண்டும் சுப்பிரமணிய சாமி சொல்கிறார்
x
தினத்தந்தி 3 April 2017 3:47 AM IST (Updated: 3 April 2017 3:47 AM IST)
t-max-icont-min-icon

பிரிவினைவாதிகளை ஒடுக்க தவறிய ஜம்மு–காஷ்மீர் முதல்–மந்திரி பதவி விலக வேண்டும் என்று பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி வலியுறுத்தினார்.

நாக்பூர்,

பிரிவினைவாதிகளை ஒடுக்க தவறிய ஜம்மு–காஷ்மீர் முதல்–மந்திரி பதவி விலக வேண்டும் என்று பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி வலியுறுத்தினார்.

பாகிஸ்தான் செல்ல வேண்டும்

நாக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சுப்பிரமணிய சாமி கலந்துகொண்டார். அப்போது பத்திரிகையாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:–

இந்திய நாட்டில் பிரிவினைவாதிகளுக்கு இடம் இல்லை. பாகிஸ்தான் தான் அவர்களுக்கு பொறுத்தமான இடம். எனவே பிரிவினைவாதிகள் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேறி பாகிஸ்தான் செல்லவேண்டும். அங்கிருந்தபடி அவர்கள் பிரதமர் மோடிக்கு எதிராக போராடலாம்.

ஜம்மு–காஷ்மீர் முதல்–மந்திரி மெகபூபா முப்தியால் பிரிவினைவாதிகளை ஒடுக்க முடியவில்லை. எனவே அவர் உடனடியாக தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அந்த மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமலுக்கு கொண்டு வரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ராமர் கோவில்

மேலும் அவரிடம் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என வெளியாகும் தகவல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர் ‘‘ வேலை இல்லாதவர்கள் தான் இதுபோன்ற பிரச்சினைகளை கிளப்புவார்கள். பகவத் தானாகவே முன்வந்து இந்த தகவல் பொய்யானது என அறிவித்துள்ளார்’’ என்றார்.

இதேபோல் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது குறித்த மற்றொரு கேள்விக்கு பதில் அளிக்கையில், ‘‘ இந்த பிரச்சினையில் தற்போது பாராளுமன்றத்தில் சட்டம் மட்டுமே இயற்ற முடியும், மேல்–சபையில் பா.ஜனதாவின் பலம் அதிகரித்தால் மட்டுமே இதற்கு தீர்வை நாம் பெறமுடியும் ’’ என்றார்.


Next Story