சாலையோரம் நின்ற பஸ் மீது லாரி மோதி விபத்து 7 பேர் உடல் நசுங்கி சாவு 14 பேர் படுகாயம்


சாலையோரம் நின்ற பஸ் மீது லாரி மோதி விபத்து  7 பேர் உடல் நசுங்கி சாவு 14 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 2 April 2017 10:24 PM GMT (Updated: 2 April 2017 10:24 PM GMT)

ஹிங்கோலியில் சாலையோரம் நின்ற தனியார் பஸ் மீது, லாரி மோதிய கோர விபத்தில் 7 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 14 பேர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மும்பை,

ஹிங்கோலியில் சாலையோரம் நின்ற தனியார் பஸ் மீது, லாரி மோதிய கோர விபத்தில் 7 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 14 பேர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்த விவரம் வருமாறு:–

விபத்து

ஹிங்கோலி– நாந்தெட் நெடுஞ்சாலையில் மாலேகாவ் பாட்டா அருகே தனியார் பஸ் ஒன்று பயணிகளுடன் சாலை ஓரமாக நின்று கொண்டிருந்தது. அப்போது, ஹிங்கோலி நோக்கி சென்ற லாரி ஒன்று எதிர்பாராவிதமாக சாலையோரம் நின்ற அந்த பஸ் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் பஸ் கவிழ்ந்து நொறுங்கியது. இதில், பஸ்சில் இருந்த பயணிகள் படுகாயமடைந்து அலறினர். இந்த விபத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் விரைந்து செயல்பட்டு பஸ்சில் சிக்கி இருந்த பயணிகளை மீட்டனர்.

இதில், சம்பவ இடத்திலேயே 7 பேர் பஸ்சின் இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 14 பேர் படுகாயமடைந்தனர்.

7 பேர் பலி

இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து படுகாயமடைந்த 14 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கலம்நரியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியான 7 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவர்களில் 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், பலியானவர்கள் இக்பால் கான், சத்யபாபா கங்காதர், அரூணா பாண்டரே, பீம்ராவ் காம்பளே, சீமா காம்பளே மற்றும் அராத்யா காம்பளே உள்பட 7 பேர் என்பது தெரியவந்தது.

தப்பி ஓட்டம்

இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திவிட்டு லாரி டிரைவர், கிளீனர் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

இந்த விபத்தினால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.


Next Story