பெண் கடத்தல் வழக்கு: விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர், சப்–இன்ஸ்பெக்டர் பலி மோட்டார் சைக்கிளில் வந்தபோது வேன் மோதியது


பெண் கடத்தல் வழக்கு: விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர், சப்–இன்ஸ்பெக்டர் பலி மோட்டார் சைக்கிளில் வந்தபோது வேன் மோதியது
x
தினத்தந்தி 9 April 2017 10:45 PM GMT (Updated: 9 April 2017 4:38 PM GMT)

பெண் கடத்தல் வழக்கில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபரும்

தாயில்பட்டி,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள பழையாபுரம் என்கிற திருவேங்கட புரத்தை சேர்ந்த பொன்னுப்பாண்டி என்பவருடைய மகன் திருப்பதி (வயது 30). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இவர் மீது பெண் கடத்தல் புகார் கூறப்பட்டது. இதுபற்றி மாரனேரி சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் சுப்பாராஜ் (54) விசாரணை நடத்தினார். அப்போது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அந்தப் பெண்ணுடன் திருப்பதி இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து, சுப்பாராஜும், தில்லை நடராஜன் என்ற போலீஸ்காரரும் கோவில்பட்டிக்கு சென்றனர். அங்கு அந்த பெண்ணையும், திருப்பதியையும் கண்டு பிடித்து இருவரையும் நேற்று விசாரணைக்காக மாரனேரிக்கு அழைத்து வந்தனர்.

இருவரும் பலி

சுப்பாராஜும், திருப்பதியும் ஒரு மோட்டார் சைக்கிளிலும், தில்லை நடராஜனும், அந்த பெண்ணும் மற்றொரு வாகனத்திலும் வந்தனர். பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் திருப்பதியை வண்டியை ஓட்டச்சொல்லி விட்டு பின்னால் சுப்பாராஜ் அமர்ந்து இருந்தார்.

தாயில்பட்டியை அடுத்துள்ள ராமச்சந்திராபுரம் அருகே வந்த போது எதிரே வந்த பட்டாசு ஆலை வேனும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் சுப்பாராஜும், திருப்பதியும் அதே இடத்தில் இறந்து போனார்கள்.

இந்த சம்பவம் குறித்து தில்லை நடராஜன் வெம்பக்கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு குமார், இன்ஸ்பெக்டர் மாரியப்பன் ஆகியோர் அங்கு விரைந்து வந்தார்கள். பலியான இருவர் உடல்களும் சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

டிரைவர் கைது

விபத்து தொடர்பாக, வேன் டிரைவர் முனீஸ்வரன் (45) கைது செய்யப்பட்டார்.

போலீசார் மடக்கியதால் திருப்பதி ஆத்திரம் அடைந்து வேண்டும் என்றே வேன் மீது மோதியிருக்கலாமோ என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்துகிறார்கள்.

உயிரிழந்த சுப்பாராஜுக்கு பத்மாவதி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.


Next Story