மதுரை குலமங்கலத்தில் ஜல்லிக்கட்டு: 588 காளைகள் சீறிப்பாய்ந்தன மாடுகள் முட்டியதில் 2 பேர் கவலைக்கிடம்


மதுரை குலமங்கலத்தில் ஜல்லிக்கட்டு: 588 காளைகள் சீறிப்பாய்ந்தன மாடுகள் முட்டியதில் 2 பேர் கவலைக்கிடம்
x
தினத்தந்தி 9 April 2017 11:30 PM GMT (Updated: 9 April 2017 5:38 PM GMT)

மதுரை அருகே குலமங்கலத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் 588 காளைகள் சீறிப்பாய்ந்தன.

மதுரை,

மதுரை அருகே குலமங்கலத்தில் ஸ்ரீராவுத்தர்பட்டி சாமி கோவில் உள்ளது. இங்கு, பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதற்காக குலமங்கலம் கண்மாயில் வாடிவாசல் அமைக்கப்பட்டிருந்தது. மேலும், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும், பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.

இதில் கலந்து கொள்ள மதுரை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 1009 காளைகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இதுபோல், 772 மாடுபிடி வீரர்களும் தங்களது பெயர்களை பதிவு செய்திருந்தனர்.

இந்தநிலையில் காலை 8 மணியளவில் ஜல்லிகட்டு போட்டி தொடங்கியது. போட்டியை மதுரை கோட்டாட்சியர் அசோகன் தொடங்கி வைத்தார்

. பரிசுகள்

முதலில் கோவில் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. அதன்பின் ஜல்லிக்கட்டு காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக சீறிப்பாய்ந்தன. இதனை மாடு பிடி வீரர்கள் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் பிடித்தனர். காளைகளை அடங்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளுக்கும் தங்ககாசு, கட்டில், பீரோ, சைக்கிள், மிக்சி, மின்விசிறி, கிரைண்டர், வெள்ளி குத்துவிளக்கு, பாத்திரங்கள் என பல வகை பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன.

மாலை 4 மணி வரை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 588 காளைகள் சீறிப்பாய்ந்தன. போட்டியில் கலந்து கொள்ளாத மற்ற காளைகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. இதுபோல், 723 மாடுபிடி வீரர்கள் மட்டுமே களத்தில் இறங்கி காளைகளை மடக்கினர். மாடுபிடி வீரர்கள் 125 பேர் கொண்ட தனித்தனி குழுக்களாக பிரிக்கப்பட்டு, அவர்களுக்கு வெவ்வேறு நிறங்களில் சீருடைகள் வழங்கப்பட்டிருந்தன.

64 பேர் காயம்

மாடுகள் முட்டியதில் 64 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவருக்கும் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், கடவூரை சேர்ந்த சின்னகாளை(35), அலங்காநல்லூரை சேர்ந்த முத்து(38) ஆகியோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தற்போது அவர்கள் இருவரும் மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story