திருப்பூரில், ஓசன்னா பாடல் பாடி குருத்தோலை ஏந்தி கிறிஸ்தவர்கள் பவனி


திருப்பூரில், ஓசன்னா பாடல் பாடி குருத்தோலை ஏந்தி கிறிஸ்தவர்கள் பவனி
x
தினத்தந்தி 9 April 2017 10:15 PM GMT (Updated: 2017-04-10T00:37:00+05:30)

திருப்பூரில் ஓசன்னா பாடல் பாடி குருத்தோலை ஏந்தி கிறிஸ்தவர்கள் வீதிகளில் பவனி வந்தனர்.

திருப்பூர்

ஏசுவின் பாடுகளை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் உபவாசம் இருந்து தவக்காலமாக கடைப்பிடித்து வருகிறார்கள். கடந்த 1–ந் தேதி சாம்பல் புதனுடன் தவக்காலம் தொடங்கியது. தவக்கால முடிவில் ஏசு உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடுகிறார்கள்.

ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படும் ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு எருசலேம் நகருக்குள் கழுதை குட்டி மேல் அமர்ந்து வரும் போது, மக்கள் தங்கள் கைகளில் குருத்தோலைகளை பிடித்து வாழ்த்து பாடல்களை பாடினார்கள்.

குருத்தோலை ஞாயிறு

இந்த சம்பவத்தை நினைவு கூறும் வகையில் குருத்தோலை ஞாயிறு கடை பிடிக்கப்படுகிறது. அதன்படி, குருத்தோலை ஞாயிறு தினமான நேற்று திருப்பூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி நடந்தது. இதையொட்டி திருப்பூர் குமரன் ரோடு புனித கேத்ரீன் தேவாலயத்தில் நேற்று காலை சிறப்பு திருப்பலி நடந்தது.

இதை தொடர்ந்து கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை கைகளில் ஏந்தியவாறு ஓசன்னா பாடல் பாடி வீதிகளில் வலம் வந்தனர். தேவாலய வளாகத்தில் இருந்து தொடங்கிய பவனி பார்க் ரோடு, குமரன் ரோடு வழியாக மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தது.

புனித வெள்ளி

இதுபோல் திருப்பூர் குமார்நகர் சூசையப்பர் தேவாலயம், திருப்பூர் அவினாசி ரோடு சி.எஸ்.ஐ. தூய பவுல் கிறிஸ்தவ தேவாலயம், கோர்ட்டு வீதியில் உள்ள லூத்தரன் தேவாலயம், நல்லூர் சி.எஸ்.ஐ. தேவாலயம் உள்பட திருப்பூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று காலை குருத்தோலை பவனி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து வருகிற வியாழக்கிழமை பெரிய வியாழனாகவும், வெள்ளிக்கிழமை புனித வெள்ளியாகவும் கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப்படுகிறது. வருகிற 16–ந் தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.


Next Story