மெட்டுவாவியில் பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்


மெட்டுவாவியில் பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 9 April 2017 10:30 PM GMT (Updated: 9 April 2017 7:33 PM GMT)

மெட்டுவாவியில் பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

நெகமம்,

பொள்ளாச்சியில் இருந்து மெட்டுவாவிக்கு தினமும் அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த பஸ்கள் மூலம் தொழிலாளர்கள், பள்ளி மாணவ–மாணவிகள் என அனைத்து தரப்பினரும் பயன் அடைந்து வந்தனர். இந்த நிலையில் தினமும் 5 முறை வந்து கொண்டிருந்த டவுன் பஸ் 2 முறை இயக்கப்படுவது நிறுத்தப்பட்டது.

அதாவது காலை 11 மணி, இரவு 8 மணி ஆகிய நேரங்களில் பஸ் இயக்கப்படாததால் கிராம மக்கள், பயணிகள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் சிரமப்பட்டனர். மேலும் இரவு நேரத்தில் வேலைக்கு செல்வோர் வெளியூர் சென்று வரும் பெண்கள் ஆகியோர் பஸ் வராததால் இரவு நேரத்தில் அருகில் உள்ள கிராமத்தில் இறங்கி நடந்து வர வேண்டிய நிலை ஏற்பட்டது.

எனவே நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் முறையாக இயக்க வேண்டும் என்று போக்குவரத்து கழகத்துக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் பஸ் இயக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது.

சிறைபிடிப்பு

பஸ் இயக்காததால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் நேற்று காலை பொள்ளாச்சியில் இருந்து மெட்டுவாவி வந்த அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் நெகமம் போலீசார், போக்குவரத்துக்கழக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

அப்போது பஸ்சை அனைத்து நேரத்திற்கும் முறையாக முன்புபோலவே மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதில் சமாதானம் அடைந்த கிராம மக்கள் பஸ்சை விடுவித்து கலைந்து சென்றனர்.


Next Story