திண்டுக்கல்–மதுரை 4 வழிச்சாலையில் விபத்து: 3 லாரிகள், ஆம்புலன்ஸ் அடுத்தடுத்து மோதல்


திண்டுக்கல்–மதுரை 4 வழிச்சாலையில் விபத்து: 3 லாரிகள், ஆம்புலன்ஸ் அடுத்தடுத்து மோதல்
x
தினத்தந்தி 9 April 2017 10:00 PM GMT (Updated: 9 April 2017 7:44 PM GMT)

திண்டுக்கல்–மதுரை 4 வழிச்சாலையில் விபத்து: 3 லாரிகள், ஆம்புலன்ஸ் அடுத்தடுத்து மோதல்; 3 பேர் படுகாயம்

திண்டுக்கல்,

திண்டுக்கல்– மதுரை 4 வழிச்சாலையில் நடந்த விபத்தில் 3 லாரிகள் மற்றும் ஆம்புலன்ஸ் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–

முட்டை லாரி

நாமக்கல்லில் இருந்து முட்டை லோடு ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கி ஒரு லாரி சென்றுகொண்டு இருந்தது. திண்டுக்கல்– மதுரை 4 வழிச்சாலையில் பள்ளப்பட்டி பிரிவு பகுதியில் சென்றபோது, திடீரென டயர் பஞ்சராகி சாலையின் வலது புறத்தில் லாரி நின்றது. அதிகாலை வேளையில் இந்த சம்பவம் நடந்தது. இதற்கிடையே, மதுரை நோக்கி சென்றுகொண்டு இருந்த மினிலாரி ஒன்று எதிர்பாராதவிதமாக பஞ்சராகி நின்ற லாரியின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் மினிலாரியின் முன்பக்கம் அப்பளம் போல நொறுங்கியது. இதில் மினிலாரி டிரைவர் சரவணன் (வயது 38) படுகாயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, திண்டுக்கல் நகரில் இருந்து சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ் ஒன்று விரைந்தது.

விபத்து நடந்த பகுதி வந்ததும் ஆம்புலன்சை அதன் டிரைவர் நிறுத்த முயன்றார். அப்போது, ஆம்புலன்சுக்கு பின்னால் வந்த மற்றொரு லாரி ஆம்புலன்ஸ் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ், ஏற்கனவே விபத்துக்குள்ளாகி நின்ற மினிலாரி மீது மோதியது.

போலீசார் விசாரணை

இந்த விபத்தில் ஆம்புலன்சின் முன்பக்கம் சேதமடைந்தது. அதை ஓட்டிய டிரைவர் கொண்டல்ராஜ் (44), ஊழியர் சர்மிளா (23) ஆகியோர் காயம் அடைந்தனர். இது குறித்து திண்டுக்கல் வடக்கு பகுதி ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பிறகு, சம்பவ இடத்துக்கு வந்த அந்த ஆம்புலன்ஸ் மூலம் காயம் அடைந்த 3 பேரும் மீட்கப்பட்டனர்.

அவர்கள் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். லாரிகள், ஆம்புலன்ஸ் ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்து மோதியதால் விபத்து நடந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது. இந்த விபத்து சம்பவங்கள் குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story