கொடைக்கானல், வத்தலக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை பவனி


கொடைக்கானல், வத்தலக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை பவனி
x
தினத்தந்தி 9 April 2017 10:30 PM GMT (Updated: 2017-04-10T01:17:33+05:30)

கொடைக்கானல், வத்தலக்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் கிறிஸ்தவர்கள் நேற்று குருத்தோலை பவனி நடத்தினர்.

கொடைக்கானல்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கிறிஸ்தவர்களுக்கான தவக்காலத்தின் 6–வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று குருத்தோலை பவனி நடந்தது. இதற்காக கொடைக்கானல் அண்ணாசாலையில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் ஊர்வலமாக வந்தனர். அப்போது கைகளில் குருத்தோலைகளை ஏந்தி வந்தனர். ஊர்வலத்தை மறை வட்ட அதிபர் ஜெரோம்ஏரோனிமுஸ் தொடங்கி வைத்தார். அண்ணாசாலையில் தொடங்கிய ஊர்வலம் மூஞ்கிக்கல் வழியாக திருஇருதய ஆலயத்தை வந்தடைந்தது. இதே போல் தூய சலேத் அன்னை ஆலயத்துக்கும் குருத்தோலை ஏந்தி கிறிஸ்தவர்கள் ஊர்வலமாக சென்றனர். அதனை தொடர்ந்து திருப்பலிகளும் நடத்தப்பட்டன.

இதே போல் சின்னாளபட்டியில் உள்ள சகாயமாதா ஆலயத்தில் இருந்து பங்குத்தந்தை அருமைசாமி தலைமையில் குருத்தோலை பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கையில் குருத்தோலைகளை ஏந்தி ஓசன்னா பாடலை பாடியபடி ஊர்வலமாக சென்றனர். சின்னாளபட்டி பிரிவில் தொடங்கிய ஊர்வலம் முக்கிய சாலைகள் வழியாக சகாயமாதா ஆலயத்தை வந்தடைந்தது. பின்னர் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதே போல் அ.வெள்ளோடு புனித சந்தியாகப்பர் ஆலயம், என்.பஞ்சம்பட்டி திருஇருதய ஆண்டவர் ஆலயம், சிறுநாயக்கன்பட்டி, பெருமாள்கோவில்பட்டி, ஆரியநல்லூர் ஆகிய ஊர்களில் உள்ள பங்கு ஆலயங்களிலும் குருத்தோலை பவனி நடைபெற்றது.

வத்தலக்குண்டு

வத்தலக்குண்டுவில் கத்தோலிக்க திருச்சபை, தென்னிந்திய திருச்சபை ஆகிய 2 திருச்சபைகள் உள்ளன. இந்த 2 திருச்சபையை சேர்ந்த கிறிஸ்தவர்களும் கடந்த 15 ஆண்டுகளாக குருத்தோலை பவனியை தனித்தனியாகவே நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று நடந்த குருத்தோலை பவனியில் 2 திருச்சபைகளை சேர்ந்த கிறிஸ்தவர்களும் இணைந்து குருத்தோலை ஊர்வலம் நடத்தினர். வத்தலக்குண்டு லியோனார்டு மருத்துவமனையில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்துக்கு கத்தோலிக்க திருச்சபை பங்கு தந்தை சேவியர், தென்னிந்திய திருச்சபை பங்குதந்தை ஆசிர்ஜெபா ஆகியோர் தலைமை தாங்கினர். இந்த ஊர்வலம் திண்டுக்கல் ரோடு, காளியம்மன்கோவில் ரோடு, மதுரை ரோடு வழியாக புனிதஜேம்ஸ் தேவாலயத்தை அடைந்தது. பின்னர் 2 தேவாலயங்களிலும் தனித்தனியாக சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது.


Next Story