அதல பாதாளத்திற்கு சென்ற நிலத்தடி நீர்: மைதானமாக மாறி வரும் குளங்கள்


அதல பாதாளத்திற்கு சென்ற நிலத்தடி நீர்: மைதானமாக மாறி வரும் குளங்கள்
x
தினத்தந்தி 9 April 2017 11:00 PM GMT (Updated: 2017-04-10T01:17:49+05:30)

அதல பாதாளத்திற்கு சென்ற நிலத்தடி நீர்: மைதானமாக மாறி வரும் குளங்கள் மழைநீரை சேமிக்க தூர்வாரப்படுமா?

ஒவ்வொரு துளி நீரும், ஒரு கட்டத்தில் உயிரை காக்கும் வல்லமை கொண்டது. அதை சேமித்து வைக்க வேண்டியது நம் அனைவரின் கடமை ஆகும். அந்த வகையில் உயிர்களுக்கு ஆதாரமான நீரை சேமிக்கவே, முன்னோர்கள் நீர்நிலைகளை உருவாக்கினர்.

நீர்நிலைகள்

எதையும் எதிர்கால நலனை மனதில் வைத்தே திட்டமிட்டு நமது முன்னோர்கள் செயல்களை மேற்கொள்வார்கள். அவ்வாறு தான் மழை வெள்ளத்தை தேக்கி வைக்க குளங்கள், அணைகளை கட்டி, வெள்ளத்தை கொண்டுவர கால்வாய், ஆறுகளை உருவாக்கினர். இந்த நீர்நிலைகள் எல்லாம் குடிநீர், விவசாயம் உள்பட அனைத்துக்கும் முக்கிய ஆதாரம் ஆகும்.

எனவே, நீர்நிலைகளை முறையாக பராமரித்து மழைநீரை சேமித்து வைக்க வேண்டும். அதன்மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும். மழை பெய்யாமல் நீர்நிலைகள் வறண்டாலும், ஆழ்துளை கிணறுகள் மூலம் நிலத்தடி நீரை எடுத்து நாம் பயன்படுத்தலாம்.

குளங்கள், அணைகள்

இதற்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் கோடைகாலத்தில் குளங்கள், அணைகளை தூர்வாரி தயாராக வைக்க வேண்டும். முக்கியமாக தண்ணீர் வரும் கால்வாய்களை முறையாக தூர்வாரி முறையாக பராமரிக்க வேண்டும். அதன்மூலம் மழைநீர் வீணாகாமல் சேமிக்கலாம். திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 2 ஆயிரம் குளங்கள் மற்றும் நீர்தேக்கங்கள், அணைகள் உள்ளன.

இவற்றில் பல குளங்களை தூர்வாரி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. மேலும் குளங்களுக்கு மழைநீர் வரும் பெரும்பாலான வரத்து கால்வாய்கள் மறைந்து போய்விட்டன. தற்போது பயன்பாட்டில் இருக்கும் வரத்து கால்வாய்களும் கரைகள் சேதமாகி காணப்படுகின்றன. கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் நீர்நிலைகளை தூர்வாரும் பணி நடக்கிறது.

திண்டுக்கல் நகர் குளங்கள்

அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்திலும் குளங்கள், கால்வாய்களை தூர்வாரும் பணி நடைபெறுகிறது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. ஆனால், மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து குளங்கள், அணைகளையும் தூர்வாரப்படவில்லை என்பது வேதனை. இதில் திண்டுக்கல் நகரில் உள்ள குளங்களும் விதிவிலக்கல்ல.

திண்டுக்கல் நகர் மற்றும் நகரை சுற்றிலும் 13 குளங்கள் உள்ளன. இந்த குளங்களின் இன்றைய நிலைமையோ மிகவும் பரிதாபமாக இருக்கிறது. அவற்றில் கோட்டைக்குளம், கோபாலசமுத்திரக்குளம், நத்தம் சாலை குளம், சிலுவத்தூர் சாலை குளம் ஆகியவை தூர்வாரப்பட்டு மழைநீரை சேமிக்க தயாராக இருக்கின்றன.

மைதானமாக மாறி...

ஆனால், அரண்மனைகுளம், அய்யன்குளம், சாமியார்தோட்டம் குளம், மருதானிக்குளம், வத்தலக்குண்டு சாலையில் உள்ள குளம், பாறைக்குளம் போன்றவை கழிவுநீர் மற்றும் குப்பைகளால் நிரம்பி விட்டன. 10 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாததால் ஒருசில குளங்கள் மைதானம் போன்று மாறி விட்டன. அவற்றில் சீமை கருவேல மரங்கள் மட்டும் செழிப்பாக வளர்ந்துள்ளன.

இதனால் நகரில் எவ்வளவு மழை பெய்தாலும் இந்த குளங்களில் மழைநீர் தேங்குவதில்லை. மேலும் குளங்களுக்கு தண்ணீர் வந்த மழைநீர் வடிகால்கள் அனைத்தும் கழிவுநீர் ஓடைகளாக மாறி விட்டன. இதன் விளைவாக மழைநீர் அனைத்தும் வீணாவது பல ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தண்ணீர் தட்டுப்பாடு

இந்த நிலையில் கடந்த ஆண்டு பருவமழை பெய்யவில்லை. ஏற்கனவே குளங்களில் தண்ணீர் தேங்காத நிலையில், மழையும் பொய்த்ததால் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. திண்டுக்கல் நகரில் 70 சதவீத ஆழ்துளை கிணறுகள் வறண்டு விட்டன. ஒரு நாளைக்கு 5 தண்ணீர் கிடைப்பதே அரிதாக இருக்கிறது. இதனால் திண்டுக்கல்லில் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது.

சமீபத்தில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளில் மட்டுமே ஓரளவு தண்ணீர் கிடைக்கிறது. குடிநீரை பொறுத்தவரை 20 நாட்களுக்கு ஒருமுறை தான் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் பிற பயன்பாட்டுக்கான தண்ணீருக்கு தினமும் காலிக்குடங்களுடன் வீதி, வீதியாக அலையும் அவலம் ஏற்பட்டு இருக்கிறது. பெண்கள் தண்ணீர் எடுத்து வர பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

குளங்களை தூர்வாரி இருந்தால்...

பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் சைக்கிள், மொபட், ஆட்டோக்களில் குடங்களுடன் சென்று தண்ணீர் பிடித்து வரும் காட்சிகளையும் காணமுடிகிறது. காலையில் வேலைக்கு செல்லும் முன்பும், வேலைக்கு சென்று திரும்பிய பின்னர் இரவிலும் தண்ணீர் எடுக்க ஆண்கள் செல்கின்றனர். அடிபம்பு, தண்ணீர் தொட்டிகளின் முன்பு எப்போதும் கூட்டம் நிரம்பி வழிகிறது.

நகரில் மண்மேடாக மாறிய இருக்கும் குளங்களை அனைத்தையும் தூர்வாரி மழைநீரை சேமித்து இருந்தால், நிலத்தடி நீர்மட்டம் இவ்வளவு மோசமான நிலைக்கு சென்று இருக்காது. தட்டுப்பாடு இல்லாமல் ஓரளவு தண்ணீர் கிடைத்து இருக்கும் என்பது மக்களின் வேதனை கலந்த கருத்தாக இருக்கிறது.

கோடைக்கு முன்பு

எனவே, பிற பகுதிகளை போன்று நகரில் உள்ள குளங்களையும் தூர்வார வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக இருக்கிறது. கோடைகாலம் நிறைவு பெறுவதற்கு சுமார் 2 மாதங்கள் வரை இருக்கின்றன. இந்த காலக்கட்டத்தில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இல்லை. எனவே, அதற்குள் நகரில் இருக்கும் அனைத்து குளங்கள், வரத்து கால்வாய்களை முழுமையாக தூர்வாரி தயார்படுத்த வேண்டும்.

அதன்மூலம் வருமகாலங்களில் மழைநீரை சேமித்தால், மழையில்லாத காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு மிக மோசமான நிலைக்கு செல்லாது. இதற்கு மாநகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது பொதுமக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

மழைநீர் சேமிப்பு

மழைநீர் சேமிப்பு என்பது மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் வெற்றிபெறும். இதற்காக தான் வீடு தோறும் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது. ஆனால், அதை யாரும் முறையாக கடைபிடிப்பதில்லை என்பது குற்றச்சாட்டு உள்ளது. திண்டுக்கல் நகரை பொறுத்தவரை 54 ஆயிரம் வீடுகள் உள்ளன. அதில் சுமார் 18 சதவீத வீடுகளில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் இல்லை. இதற்கு மாநகராட்சி நிர்வாகம் பலமுறை எச்சரிக்கை செய்தும் மக்கள் கண்டுகொள்வதாக இல்லை. அதேபோல் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உள்ள வீடுகளிலும் முறையாக இல்லை.

வீடுகளுக்கு ஆய்வு செய்ய வரும் மாநகராட்சி அதிகாரிகளை ஏமாற்றும் வகையில் பெயரளவுக்கு தான் அமைத்து உள்ளனர். அதன் மூலம் மழைநீரை சேமிக்க முடியாது. அந்த வகையில் சுமார் 30 சதவீத வீடுகளில் பயன்படாத வகையில் தான் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் இருக்கின்றன. அவற்றை முறையாக அமைப்பதோடு, இல்லாத வீடுகளிலும் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பை உருவாக்க வேண்டும். அதன்மூலமும் மழைநீரை சேமிக்கலாம். இதற்கு மக்கள் ஆர்வமுடன் ஒத்துழைக்க வேண்டும், என்று மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story