விருத்தாசலம் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை நள்ளிரவில் கைவரிசை காட்டிய மர்மநபர்களுக்கு வலைவீச்சு

விருத்தாசலம் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அருகே மன்னம்பாடி கிராமத்தில் மகாமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் மாலை பூஜை நடைபெற்றது. இதையடுத்து இரவு கோவில் கதவை பூசாரி சுந்தரமூர்த்தி பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று காலை கோவிலை திறப்பதற்காக வந்தார். அப்போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்த கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் கோவிலுக்குள் உள்ளே சென்று பார்த்தார். அப்போது கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதற்கிடையே இதுபற்றி அறிந்த கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம மக்கள் கோவிலுக்கு திரண்டு வந்தனர்.
மர்மநபர்களுக்கு வலைவீச்சுமேலும் இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பூசாரி கோவிலை பூட்டிவிட்டு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், நள்ளிரவில் கோவிலின் முன்பக்க கதவை உடைத்து உடைத்து உள்ளே புகுந்த உண்டியலில் இருந்த பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. கொள்ளை போன பணத்தின் மதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவில் உண்டியல் பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.