பனப்பாக்கம் எல்லம்மன் கோவில் கும்பாபிஷேகம்


பனப்பாக்கம் எல்லம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 9 April 2017 11:15 PM GMT (Updated: 2017-04-10T01:24:07+05:30)

பனப்பாக்கம் எல்லம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

பனப்பாக்கம்,

எல்லம்மன் கோவில்

பனப்பாக்கம் குயவீதியில் பழமைவாய்ந்த எல்லம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் 24 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. இந்த நிலையில் 3 நிலை கொண்ட ராஜகோபுரம், அம்மன் கருவறை விமானம், மகா மண்டபம் மற்றும் அழகிய சிற்ப வேலைகள் செய்யப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 7-ந் தேதி காலை கணபதி பூஜை, லட்சுமி பூஜை, யாகசாலை பூஜை தொடங்கியது. அன்று மாலை 4 மணிக்கு சாமி கரிக்கோலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 8-ந் தேதி 2-ம் கால யாகசாலை பூஜை, மகா தீபாராதனை நடந்தது.

கும்பாபிஷேகம்

நேற்று காலை 6 மணிக்கு யாகசாலை பூஜைகளும், மகாதீபாராதனையும் நடைபெற்றது. 9 மணிக்கு யாகசாலையில் இருந்து புனிதநீர் குடங்கள் கோபுரத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், திருவலம் சாந்தா சுவாமிகள், பனப்பாக்கம் சண்முக சுவாமிகள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.

பகல் 12 மணிக்கு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 8 மணிக்கு வாணவேடிக்கை, இன்னிசை நிகழ்ச்சி, கோலாட்டம், புலியாட்டம் ஆகிய நிகழ்ச்சிகளுடன் சிம்மவாகனத்தில், சிறப்பு அலங்காரத்துடன் எல்லம்மன் வீதி உலா நடைபெற்றது.

நீதிபதிகள்

சிறப்பு அழைப்பாளராக ஜம்முகாஷ்மீர் ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.சுதாகர், சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.கிருபாகரன், எம்.எம்.சுந்தரேஷ், வி.பாரதிதாசன், எஸ்.வைத்தியநாதன், எம்.வி.முரளிதரன், வேலூர் மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.ஆனந்தி, ராணிப்பேட்டை சார்பு நீதிபதி நசிரின் மற்றும் வாலாஜா, அரக்கோணம், காஞ்சீபுரம் பகுதிகளை சேர்ந்த நீதிபதிகள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. கும்பாபிஷேக புனிதநீர் கலசங்கள் மற்றும் கோவில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

பனப்பாக்கம் பேரூராட்சி முன்னாள் தலைவர்கள் மயூரநாதன், ஜோதிதயாளன், ஜெகதாம்பாள் ராமு, லோகநாதன், முன்னாள் துணைத்தலைவர் பாலசுந்தரம் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

பனப்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிச்சந்திரபாபு தலைமையில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், மருத்துவ வசதி, கழிப்பிட வசதி ஆகியவை செய்யப்பட்டிருந்தது.

விழா ஏற்பாடுகளை கிராமமணிகள் கே.கே.என்.கருணன், எம்.ஏ.சண்முகம், விழாக்குழு தலைவர் எஸ்.ஆர்.எஸ்.விநாயகம், கோவில் அறங்காவலர் எம்.கார்த்திகேயன் மற்றும் வடபுற செங்குந்தர் சமுதாயம், திருப்பணிக்குழு, கும்பாபிஷேக விழா குழுவினர் செய்திருந்தனர்.

Next Story