அடுத்தவரின் பாலிசி பத்திரத்தை அடமானம் வைத்து மோசடியில் ஈடுபட்டதாக எல்.ஐ.சி. ஏஜெண்டு மீது புகார் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தரவு

அடுத்தவரின் பாலிசி பத்திரத்தை அடமானம் வைத்து மோசடியில் ஈடுபட்டதாக எல்.ஐ.சி. ஏஜெண்டு மீது கூறப்பட்டுள்ள புகார்
மதுரை,
மதுரை தத்தனேரியைச் சேர்ந்தவர் தசீர்கான். இவர், மதுரை 2–வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
மதுரை கூடல்நகர் தினமணிநகரைச் சேர்ந்த எல்.ஐ.சி. ஏஜெண்டு மீனாட்சிசுந்தரம் என்பவரிடம் நட்பு அடிப்படையில் 16 லட்சத்து 93 ஆயிரத்து 500 ரூபாய்க்கு எல்.ஐ.சி. பாலிசி எடுத்தேன். பாலிசி பத்திரத்தை கேட்ட போது எல்.ஐ.சி. அலுவலகத்தில் இருப்பதாக தெரிவித்தார்.
இந்தநிலையில் என்னிடம் இருந்து ஏற்கனவே கையெழுத்து பெற்ற விண்ணப்பத்தின் மூலம் 16 லட்சத்து 93 ஆயிரத்து 500 ரூபாய்க்கான பாலிசி பத்திரத்தை மீனாட்சிசுந்தரம் எனக்கு தெரியாமல் எல்.ஐ.சி. அலுவலகத்தில் அடமானம் வைத்திருப்பது தெரியவந்தது.
பணம் திரும்ப கிடைக்காதுஇதுசம்பந்தமாக எல்.ஐ.சி. அலுவலகத்தில் விசாரித்த போது கூடுதல் கமிஷன், ஊக்கத்தொகை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எனது பாலிசி பத்திரத்தை அடமானம் வைத்து எனது பெயரில் வேறு சில திட்டத்தின் கீழ் பாலிசி எடுத்திருப்பது தெரியவந்தது.
பாலிசி பத்திரம் அடகு வைக்கப்பட்டுள்ளதால், நான் ஏற்கனவே செலுத்திய பணம் திரும்ப கிடைக்காது என்றும், வேறு சில திட்டத்தின் கீழ் எனது பெயரில் மீனாட்சிசுந்தரம் எடுத்துள்ள பாலிசியை பொறுத்தமட்டில் அதை புதுப்பிக்க பல லட்சம் ரூபாய் பணம் செலுத்த வேண்டும் என்றும் எல்.ஐ.சி. அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதேபோன்று தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தால் 5 வருடத்தில் 2 மடங்காக பணம் கிடைக்கும் என்று கூறி ரூ.3 லட்சம் பெற்றுக்கொண்டு அந்த தொகையையும் எனது பெயரில் செலுத்தாமல் தனது பெயரில் செலுத்தி மீனாட்சி சுந்தரம் என்னை ஏமாற்றி விட்டார்.
நடவடிக்கை எடுக்கவில்லைஇதுகுறித்து கேட்ட எனக்கு மீனாட்சிசுந்தரம் கொலை மிரட்டல் விடுத்தார். மோசடியில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்த மீனாட்சிசுந்தரம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை நகர போலீஸ் கமிஷனர், செல்லூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோரிடம் மனு கொடுத்தேன்.
அவர்கள், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நான் கொடுத்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இன்ஸ்பெக்டருக்கு உத்தரவுஇந்த மனு மாஜிஸ்திரேட்டு சக்திவேல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் எஸ்.எம்.ஏ.ஜின்னா ஆஜரானார்.
மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, மனுதாரரின் புகார் மீது செல்லூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து அதுதொடர்பான அறிக்கையை அடுத்த மாதம்(மே) 5–ந் தேதிக்கு கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.