திருவள்ளூர் அருகே 9–ம் வகுப்பு மாணவன் ஏரியில் மூழ்கி சாவு


திருவள்ளூர் அருகே 9–ம் வகுப்பு மாணவன் ஏரியில் மூழ்கி சாவு
x
தினத்தந்தி 9 April 2017 11:15 PM GMT (Updated: 2017-04-10T01:31:38+05:30)

திருவள்ளூர் அருகே 9–ம் வகுப்பு மாணவன் ஏரியில் மூழ்கி இறந்தார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த திருமழிசை காவல்சேரி ரோட்டில் வசிப்பவர் மணிசன். சென்னை கிண்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி ஸ்ரீகலா காவல்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களின் மகன் மிதுன் (வயது 14). 9–ம் வகுப்பு படித்து வந்தார்.

மிதுன் நேற்று முன்தினம் மாலை பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்தார். சிறிது நேரத்தில் அதே பகுதியில் உள்ள தன் நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்தார்.

ஏரியில் பிணம்

இந்நிலையில் வீட்டுக்கு அருகில் விளையாடி கொண்டிருந்த மிதுனை காணாததால் அவருடைய பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். பின்னர் அவரை கண்டுபிடித்து தருமாறு வெள்ளவேடு போலீசில் புகார் செய்தனர். அதன்படி சப்–இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் வழக்குப்பதிவு செய்து மாணவனை தேடி வந்தார்.

இதனிடையே நேற்று மதியம் கோலப்பன்சேரி ஏரியில் பிணம் ஒன்று மிதப்பதை அவ்வழியாக சென்றவர்கள் கண்டனர். இது பற்றி வெள்ளவேடு போலீசுக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர்.

உடல் மீட்பு

உடனே போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அது மாணவன் மிதுன் என தெரியவந்தது. இதையடுத்து அவரின் உடலை போலீசார் மீட்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில், மிதுன் நண்பர்களுடன் கோலப்பன்சேரி ஏரியில் குளிக்க சென்ற போது நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி இறந்துபோனதும், இதை வெளியே சொல்ல பயந்து அவருடைய நண்பர்கள் வீட்டுக்கு திரும்பியதும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story