வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: தர்ப்பூசணி-கரும்புசாறு விற்பனை அமோகம்


வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: தர்ப்பூசணி-கரும்புசாறு விற்பனை அமோகம்
x
தினத்தந்தி 9 April 2017 10:45 PM GMT (Updated: 2017-04-10T02:31:53+05:30)

பெரம்பலூரில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் தர்ப்பூசணி, கரும்புசாறு உள்ளிட்டவை விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் பருவமழை பொய்த்து போனதால் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. தற்போது நாளுக்கு நாள் வெயிலின் தாக்கமும் அதிகரித்து வருகிறது. சராசரியாக 100 டிகிரிக்கும் மேலாக வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் பணி நிமித்தமாக வெளிஇடங்களுக்கு இருசக்கர வாகனத்தில் செல்வோர் மற்றும் பல்வேறு தேவைகளுக்காக போக்குவரத்தை மேற்கொள்ளும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கடுமையான சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

மேலும் இரவு நேரங்களில் கூட வீட்டில் வெப்பமாக உள்ளது. இதனால் மக்கள் கடுமையான புழுக்கத்தால் தூக்கமின்றி தவித்து வருகின்றனர்.

தர்ப்பூசணி விற்பனை அமோகம்

இந்த நிலையில் பெரம்பலூரில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், பழைய பஸ்நிலையம், சங்குபேட்டை, பாலக்கரை, துறையூர் ரோடு உள்ளிட்ட இடங்களில் விற்பனைக்காக தர்ப்பூசணி பழங்கள் குவித்து வைக்கப்பட்டு உள்ளன. 1 கிலோ தர்ப்பூசணி பழம் ரூ.12 முதல் ரூ.15 வரைக்கும், 1 கப் தர்ப்பூசணி சாறு ரூ.10-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மக்கள் தாகத்தை தணிக்க தர்ப்பூசணி பழங்களை ஆர்வத்துடன் வாங்கி சாப்பிடுவதுடன் வீட்டிற்கும் வாங்கி செல்கின்றனர்.

மேலும் கரும்புசாறு, கம்மங்கூழ், கேப்பை கூழ், பழரசமும் வாங்கி பருகுகின்றனர். கரும்புசாறு ஒரு கப் ரூ.10-க்கும், கூழ் ஒரு சொம்பு ரூ.15-க்கும் விற்பனை ஆகிறது. இவ்வாறு பொதுமக்கள் தர்ப்பூசணி, கரும்புசாறு, கூழ், பழரசம் உள்ளிட்டவற்றை ஆர்வமாக வாங்கி பருகுவதால் அவற்றின் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

மண்பானை

மேலும் மண்பானையில் ஊற்றி வைக்கப்படும் நீர் பருகுவதற்கு குளிர்ச்சியாக இருக்கும் என்பதால் மண்பானைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். பெரம்பலூர் பழைய பஸ் நிலையம், கடைவீதி உள்ளிட்ட இடங்களில் மண்பானைகள் குவித்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அளவிற்கேற்ப ரூ.80, ரூ.100, ரூ.150, ரூ.200 என்கிற விலையில் மண்பானைகள் விற்கப்படுகின்றன. மேலும் காண்போரை கவர்ந்திழுக்கும் வகையில் உள்ள ஜக், டம்ளர் உள்ளிட்ட மண்பாண்ட பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன.

பணிநிமித்தமாக செல்வோர் தங்களது பையில் எலுமிச்சை பழசாறு, மோர் உள்ளிட்டவற்றை முன்னெச்சரிக்கையாக எடுத்து சென்று தாகம் எடுக்கும்போது அதனை பருகி உடலை குளிர்வித்து கொள்கின்றனர். சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க கல்லூரி மாணவிகள் துப்பட்டாவாலும், பெண்கள் சேலையாலும் தலையை மூடியபடி வீதிகளில் செல்வதை காண முடிகிறது. எனினும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் வெயிலில் செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே பெரம்பலூர் பஸ் நிலையம் உள்பட நகரில் மக்கள் கூடும் இடங்களில் தூய்மையான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என நகராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story