காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விவசாயிகள் முற்றுகை போராட்டம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விவசாயிகள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 9 April 2017 11:00 PM GMT (Updated: 2017-04-10T02:32:27+05:30)

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சையில் 13-வது நாளாக விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், சிவா எம்.பி., ஜான்பாண்டியன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

தஞ்சாவூர்,

காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கடந்த மாதம் 28-ந்தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இரவு, பகலாக நடைபெறும் இந்த போராட்டம் நேற்று 13-வது நாளாகவும் நீடித்தது. காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும். காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை ரத்து செய்யக்கூடாது. மேகதாதுவில் அணை கட்டுவதை தடை செய்ய வேண்டும். காவிரி டெல்டா பகுதியில் எண்ணெய், எரிவாயு எடுக்கக்கூடாது.

காவிரி சமவெளி பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும். அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு உரிய வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

விவசாயிகள் பங்கேற்பு

போராட்டத்தில் காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன், தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அயனாபுரம் முருகேசன், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் குடந்தைஅரசன், தமிழர் தேசிய பேரியக்க மாவட்ட செயலாளர் குழ.பால்ராசு, இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் சிமியோன்சேவியர்ராஜ், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைமை ஆலோசகர் பாரதிசெல்வன், மற்றும் பல்வேறு விவசாய அமைப்புகளை சேர்ந்தவர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்திற்கு பல்வேறு விவசாய அமைப்புகளும் நேற்று ஆதரவு தெரிவித்தன.

திருநாவுக்கரசர்- சிவா எம்.பி.

இந்த நிலையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மற்றும் காவிரி உரிமை மீட்புக்குழுவினரை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் கிருஷ்ணசாமிவாண்டையார், பி.ஜி.ராஜேந்திரன், லோகநாதன், முன்னாள் மாவட்ட தலைவர் நாஞ்சி.கி.வரதராஜன், காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் வக்கீல் அன்பரசன், மாவட்ட பொருளாளர் பழனியப்பன், மகளிரணி செயலாளர் சித்ரா, நிர்வாகிகள் செல்வம், ராஜூ, கதர்வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதே போல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் சிவா எம்.பி. நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது தஞ்சை மாவட்ட தி.மு.க. மருத்துவர் அணி அமைப்பாளர் அஞ்சுகம்பூபதி உடன் இருந்தார். இதே போல் தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் ஜான்பாண்டியனும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது மாவட்ட செயலாளர் தியாக.காமராஜ் உடன் இருந்தார்.

அக்கறை இல்லை

பின்னர் சிவா எம்.பி. நிருபர்களிடம் கூறுகையில், “விவசாயிகள் மிகப்பெரிய போராட்டத்தில் இறங்கி உள்ளனர். டெல்லியில் 27 நாட்களாக விவசாயிகள் போராடுகிறார்கள். தஞ்சையில் 13-வது நாளாக போராட்டம் நடக்கிறது. பல்வேறு இடங்களிலும் இந்த போராட்டம் நடைபெற்றாலும் தீர்வு மட்டும் கண்ணுக்கு தெரியவில்லை. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க சொல்லி தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் என்னை அனுப்பி உள்ளார். கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில் காவிரி தீர்ப்பாயத்தை கலைக்கும் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிலையில் இந்த போராட்டம் நடக்கிறது. மேலும் விவசாயிகளுடன் நான் மத்திய மந்திரி அருண்ஜெட்லியை சந்தித்து பேசிய போது அவர் கடன்தள்ளுபடிக்கு அப்பாற்பட்டு விவசாயிகளுக்கு வேறு என்ன செய்ய வேண்டும் என கேட்டார். அதற்கு தமிழகத்தில் 30 லட்சம் ஏக்கருக்கான பயிர் காப்பீடு தொகை ரூ.8 ஆயிரத்து 878 கோடி வழங்கினால் விவசாயிகளுக்கு ஆறுதலாக இருக்கும் என்றோம். அதற்கு அவர் பரிசீலனை செய்வதாக தெரிவித்தார்.

இந்த பிரச்சினையில் தீவிர கவனம்செலுத்த வேண்டிய தமிழக அரசு மெத்தனமாக உள்ளது. தமிழக அரசு தங்கள் அதிகாரத்துக்குட்பட்டு கடனை தள்ளுபடி செய்யலாம். அல்லது மத்திய அரசுடன் பேசி தீர்வு கொண்டு வரலாம். ஆனால் அவர்களே வந்து போராடுபவர்களுடன் உட்காரும் வேடிக்கை நடந்து வருகிறது. மாநிலங்களவை நாளை (இன்று) கூடும் போது விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக பேச நோட்டீசு கொடுத்துள்ளேன். அப்போது விவசாயிகளின் பிரச்சினையை வலியுறுத்துவேன். விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காண எந்த நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கவில்லை. மக்கள் பிரச்சினையை தீர்க்க வேண்டிய அக்கறை அவர்களுக்கு இல்லை”என்றார்.


Next Story