அண்ணாசாலையில் ஏற்பட்ட ‘திடீர்’ பள்ளத்தில் பஸ், கார் சிக்கியது பயணிகள் அலறியடித்து ஓட்டம்


அண்ணாசாலையில் ஏற்பட்ட ‘திடீர்’ பள்ளத்தில் பஸ், கார் சிக்கியது பயணிகள் அலறியடித்து ஓட்டம்
x
தினத்தந்தி 9 April 2017 11:15 PM GMT (Updated: 9 April 2017 9:47 PM GMT)

மெட்ரோ ரெயில் பணியின் போது விபத்து: அண்ணாசாலையில் ஏற்பட்ட ‘திடீர்’ பள்ளத்தில் பஸ், கார் சிக்கியது பயணிகள் அலறியடித்து ஓட்டம்

சென்னை,

மெட்ரோ ரெயில் பணியின் போது அண்ணாசாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் மாநகர பஸ், கார் சிக்கிக்கொண்டது. பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

திடீர் பள்ளம்

சென்னை அண்ணா சதுக்கத்தில் இருந்து நேற்று பகல் 1.35 மணிக்கு புறப்பட்ட மாநகர பஸ் வடபழனியை நோக்கி சென்றுகொண்டு இருந்தது. பஸ்சை வடபழனி பணிமனையை சேர்ந்த டிரைவர் குணசீலன் ஓட்டினார். பிற்பகல் 2.10 மணியளவில் அண்ணாசாலையில் உள்ள சர்ச் பார்க் பள்ளி அருகே பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிடுவதற்காக டிரைவர் பஸ்சை நிறுத்தினார்.

பயணிகள் இறங்கிய பிறகு பஸ்சை இயக்க டிரைவர் முயற்சித்த போது சத்தம் கேட்டது. இதையடுத்து பஸ் டிரைவர் குணசீலன் இறங்கி பார்த்த போது புகை வர தொடங்கி, சாலையில் விரிசல் விட ஆரம்பித்தது.

இதை பார்த்த பயணிகள் அலறினார்கள். டிரைவர் குணசீலன் உடனே பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரையும் கீழே இறங்கும்படி அறிவுறுத்தினார். அதன்படி பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் உடனே கீழே இறங்கி ஓட்டம் பிடித்தனர். பயணிகள் கீழே இறங்கிய மறுகணமே சாலையில் 8 அடி ஆழத்தில் திடீரென்று பள்ளம் விழுந்தது.

பஸ்சும், காரும் மாட்டிக்கொண்டது

பஸ்சின் முன்பகுதி பள்ளத்தில் சிக்கி, பின்பக்க டயர் தூக்கியபடி நின்றது. பஸ்சுக்கு அருகில் சென்று கொண்டிருந்த சொகுசு காரும் இந்த பள்ளத்தில் சிக்கிக்கொண்டது. சினிமா படத்தில் வருவது போல காரின் இடதுபக்க டயர் பள்ளத்தில் மாட்டிக்கொண்டு அப்படியே மெதுவாக சரிந்து பள்ளத்தில் விழுந்தது.

பள்ளத்தில் சிக்கிக்கொண்ட காரை மேற்கு முகப்பேரை சேர்ந்த பிரதீப் என்பவர் ஓட்டி வந்தார். அவர் மாதவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தைகள் நல டாக்டராக பணி புரிந்து வருகிறார். அவர் நேற்று கோபாலபுரத்தில் சொந்த வேலைக்காக வந்துவிட்டு திரும்பும்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

காரின் உள்ளே இருந்த அவரை அருகில் இருந்தவர்கள் காரின் வலதுபக்க கண்ணாடி வழியாக வெளியே பத்திரமாக தூக்கி மீட்டனர். அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து பின்புறமாக வந்த மற்ற வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டது.

மாற்றுப்பாதையில் வாகனங்கள்

இதுதொடர்பாக அந்த பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் உடனே தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். மேலும் அண்ணாசாலைக்கு அடியில் மெட்ரோ ரெயில் பணி நடைபெற்று வருகிறது. அதன் காரணமாகவே இந்த பள்ளம் ஏற்பட்டதாக இதுகுறித்து அவர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

சாலையில் பள்ளம் ஏற்பட்டதால் அந்த பாதையை போலீசார் உடனே தடுப்பு வேலி அமைத்து மூடினார்கள். அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதற்கிடையில் தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்துக்கு மெட்ரோ ரெயில் அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். தீயணைப்புத்துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மெட்ரோ அதிகாரிகள் பார்வையிட்ட பிறகு, அதை சரிசெய்வதற்காக உடனுக்குடன் மெட்ரோ ரெயில் நிறுவன ஊழியர்களும் வரவழைக்கப்பட்டனர்.

கிரேன் மூலம் தூக்கினார்கள்

முதலில் பள்ளத்தில் கிடந்த பஸ்சையும், காரையும் அகற்றும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டனர். அதற்காக 2 வகையான கிரேன்கள் வரவழைக்கப்பட்டன. பிற்பகல் 3 மணியளவில் காரை சிறிய அளவிலான கிரேன் மூலம் தூக்கி எடுக்கும் பணியில் ஈடுபட தொடங்கினார்கள். சரியாக 3.25 மணியளவில் கிரேன் உதவியின் மூலம் பள்ளத்தில் இருந்து காரை வெளியே தூக்கினார்கள்.

வெளியே எடுக்கப்பட்ட காரை, டாக்டர் பிரதீப் ஓட்டிச் செல்ல முயற்சித்தார். ஆனால் காரின் பின்பகுதியில் இருந்து புகை வந்ததால் காரை அங்கேயே நிறுத்திவிட்டார். அதன்பின்னர், மற்றொரு இழுவை வாகனம் மூலம் அங்கிருந்து கார் கொண்டு செல்லப்பட்டது.

கார் வெளியே எடுக்கப்பட்ட பிறகு, பிற்பகல் 3.35 மணியளவில் பஸ்சை எடுக்கும் முயற்சியில் மெட்ரோ ரெயில் நிறுவன ஊழியர்களும், தீயணைப்புத்துறையினரும் தீவிரமாக ஈடுபட்டனர். இதற்காக 55 டன் எடை அளவுள்ள பொருட்களை தூக்கும் பெரிய அளவிலான ராட்சத கிரேன் மூலம் பஸ்சை பள்ளத்தில் இருந்து மெதுவாக தூக்கி வெளியே எடுத்தனர். வெளியே எடுத்து கொண்டு வரப்பட்ட பஸ்சை மாற்று டிரைவர் மூலம் அங்கிருந்து ஓட்டி சென்றனர்.

10 வினாடிகளில் நடந்த சம்பவம்

இதைத்தொடர்ந்து மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் பள்ளத்தை மூடும் பணியில் ஈடுபட தொடங்கினார்கள். பள்ளத்தின் உள்ளே இருந்த உடைந்த சாலைகளை ஜே.சி.பி. எந்திரம் மூலம் அகற்றி அந்த பள்ளத்தில் கலவைகளை கொட்டி மூடினார்கள்.

இதுகுறித்து மாநகர பஸ் டிரைவர் குணசீலனும், நடத்துனர் ரமேசும் நிருபர்களிடம் கூறுகையில், ‘பிற்பகல் 2.10 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. முதலில் சத்தம் கேட்டதும் பஸ்சை விட்டு இறங்கி பார்த்தோம். அப்போது புகை வந்து, சாலையில் திடீரென்று பள்ளம் ஏற்பட்டது. டயரில் உள்ள காற்றும் இறங்குவது போல, அந்த பள்ளத்தில் பஸ் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கியது. பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக இறங்கிவிட்டனர். மொத்தம் 7 பெண்கள் உள்பட 35 பயணிகள் இருந்தனர். 10 வினாடிகளில் இந்த சம்பவம் நடந்துவிட்டது’ என்றனர்.

உயிர் பிழைத்தேன்

இதுதொடர்பாக பள்ளத்தில் மாட்டிக்கொண்ட காரில் பயணம் செய்த டாக்டர் பிரதீப் கூறுகையில், ‘பஸ் பள்ளத்தில் விழும்போது நான் அருகில் காரில் வந்து கொண்டு இருந்தேன். அந்த பள்ளத்தில் மாட்டிக்கொள்ளாதபடி சாலையின் ஓரத்திற்கு செல்ல முயற்சித்தேன். ஆனால் அதற்குள் காரின் இடதுபக்க டயர் பள்ளத்தில் மாட்டிக்கொண்டு அப்படியே சரிய தொடங்கியது. நல்லவேளையாக காரை மெதுவாக ஓட்டிவந்ததால் உயிர் பிழைத்தேன். என் வாழ்நாளில் இது மறக்க முடியாத சம்பவம்’ என்றார். 

Next Story