இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்களிடம், தூத்துக்குடி கலெக்டர் விசாரணை


இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்களிடம், தூத்துக்குடி கலெக்டர் விசாரணை
x
தினத்தந்தி 10 April 2017 9:30 PM GMT (Updated: 2017-04-10T20:21:40+05:30)

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்களிடம், தூத்துக்குடி கலெக்டர் ரவிகுமார் நேற்று விசாரணை நடத்தினார்.

தூத்துக்குடி

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்களிடம், தூத்துக்குடி கலெக்டர் ரவிகுமார் நேற்று விசாரணை நடத்தினார்.

இலங்கை மீனவர்கள்

தூத்துக்குடி கடலோர காவல்படை ரோந்து கப்பல் வைபவ் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தது. அப்போது தூத்துக்குடியில் இருந்து சுமார் 58 கடல்மைல் தொலைவில் ஒரு இலங்கை படகில் சில மீனவர்கள், இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். உடனடியாக இந்திய கடலோர காவல் படையினர் விரைந்து சென்று படகை மடக்கி பிடித்தனர்.

புழல் சிறையில் அடைப்பு

படகில் இருந்த இலங்கை அம்பகண்டவிளையை சேர்ந்த தினேஷ்குமார், அந்தோணி சாந்தா திசாரே, பிரபாத் அத்தநாயகா, சுமித் ரயான்சி, அஜித் சிசாரா குமாரா, பிரமோத், சுனில் அத்தநாயகா ஆகிய 7 மீனவர்களையும் கடலோர காவல் படையினர் கைது செய்து, தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இது குறித்து தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீசார் 7 மீனவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்தனர். பின்னர், 7 மீனவர்களும் ராமநாதபுரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கலெக்டர் விசாரணை

இந்த நிலையில் புழல் சிறையில் இருந்து 7 மீனவர்களும் நேற்று மதியம் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு கலெக்டர் ரவிகுமார் தலைமையில் மீனவர்களிடம் விசாரணை நடந்தது. விசாரணையின் போது, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீஷ், கடலோர காவல்படையினர், மீன்வளத்துறை அதிகாரிகள், உளவுப்பிரிவு அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, இலங்கை மீனவர்கள் எதற்காக இந்திய எல்லைக்குள் நுழைந்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு பிறகு 7 மீனவர்களும் மீண்டும் சென்னை புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.


Next Story