5 உண்டியல்களை திருடி பல லட்சம் ரூபாய் கொள்ளை மர்ம நபர்களை போலீஸ் தேடுகிறது


5 உண்டியல்களை திருடி பல லட்சம் ரூபாய் கொள்ளை மர்ம நபர்களை போலீஸ் தேடுகிறது
x
தினத்தந்தி 10 April 2017 9:31 PM GMT (Updated: 2017-04-11T03:00:37+05:30)

வேனூர் பகுதியில் அடுத்தடுத்து 2 கோவில்களில் 5 உண்டியல்களை திருடி அவற்றை தோட்டத்தில் வைத்து உடைத்து அதில் இருந்த பல லட்சம் ரூபாயை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

மங்களூரு,

தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா வேனூர் பகுதியில் மகாலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவில் வழக்கம்போல் பூஜைகள் முடிந்து பூசாரிகளும், கோவில் நிர்வாகிகளும் கோவிலை பூட்டிவிட்டு தங்களது வீடுகளுக்கு சென்றுவிட்டனர். நேற்று காலையில் வந்து பார்த்தனர்.

அப்போது கோவிலின் முன்பக்க நுழைவு வாயிலின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கோவில் நிர்வாகிகளும், பூசாரிகளும் கோவிலுக்குள் சென்று பார்த்தனர். அப்போது கோவிலுக்குள் இருந்த 3 உண்டியல்களை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் கோவிலின் பூட்டை உடைத்து உண்டியல்களை திருடிச் சென்றது தெரியவந்தது.

உண்டியல்கள் திருட்டு

இதேபோல், அப்பகுதியில் உள்ள சாந்தி நாகசாமி கோவிலிலும் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 2 உண்டியல்களை திருடிச் சென்றிருந்தனர். இதுகுறித்து வேனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர் மோப்ப நாயும், கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். மோப்ப நாய் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்து அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்திற்குள் ஓடியது. அங்கு மகாலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் சாந்தி நாகசாமி கோவில் ஆகிய 2 கோவில்களில் இருந்தும் திருடப்பட்ட 5 உண்டியல்கள் உடைக்கப்பட்டு கிடந்தன. அதில் இருந்த பல லட்சம் ரூபாயும் கொள்ளை போய் இருந்தது. யாரோ மர்ம நபர்கள் அடுத்தடுத்து 2 கோவில்களிலும் கைவரிசை காட்டியிருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.

பரபரப்பு

இதையடுத்து போலீசார் அங்கிருந்த தடயங்களை கைப்பற்றி ஆய்வுக்காக தடய அறிவியல் துறைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். கோவில்களில் உண்டியல்கள் திருடப்பட்டு, அதில் இருந்த பல லட்சம் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story