ஓட்டுப்போட பணம் கொடுத்து மக்களை தவறான பாதைக்கு அழைத்து சென்றவர் எடியூரப்பா சித்தராமையா கடும் தாக்கு


ஓட்டுப்போட பணம் கொடுத்து மக்களை தவறான பாதைக்கு அழைத்து சென்றவர் எடியூரப்பா சித்தராமையா கடும் தாக்கு
x
தினத்தந்தி 10 April 2017 9:46 PM GMT (Updated: 10 April 2017 9:45 PM GMT)

தேர்தலில் ஓட்டுப்போடுவதற்கு பணம் கொடுத்து மக்களை தவறான பாதைக்கு அழைத்து சென்றவர் எடியூரப்பா தான், என்று முதல்-மந்திரி சித்தராமையா குற்றம்சாட்டி உள்ளார்.

சிவமொக்கா,

சிவமொக்காவில் நேற்று நடந்த நில அளவையாளர்கள் தின விழாவில் கலந்துகொள்ள முதல்-மந்திரி சித்தராமையா வந்தார். கூட்டம் முடிந்த பின் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“ஆபரேஷன் கமலா“ எனற பெயரில் தேர்தலில் ஓட்டுப்போட மக்களுக்கு பணத்தை கொடுத்தது அவர்களை தவறான பாதைக்கு அழைத்துச் சென்றதே எடியூரப்பாவும், ஈசுவரப்பாவும் தான். ஆனால் அவர்கள் இந்த இடைத்தேர்தலில் காங்கிரசார் பணம் கொடுத்ததாக குற்றம்சாட்டி வருகின்றனர். நடந்து முடிந்த குண்டலுபேட்டை, நஞ்சன்கூடு தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜனதா கட்சியினர் எத்தனை கோடி செலவிட்டனர் என மக்களிடம் கூற தயாரா?.

வசைபாடி வருகிறார்

எடியூரப்பா ஆட்சிக் காலத்தில் கர்நாடக விவசாயிகளின் கடனை அவர் ரத்து செய்தாரா?. ஆனால் தற்போது எனது தலைமையிலான அரசு விவசாயக்கடனை தள்ளுபடி செய்யாமல் விவசாயிகளை வஞ்சித்து வருவதாக எடியூரப்பா குற்றம்சாட்டி வருகிறார். ஆனால் விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்ட கடன் பொதுத்துறை வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு உள்ளது.

அந்த கடனை மத்திய அரசு தான் தள்ளுபடி செய்ய வேண்டும். ஆனால் அதை செய்வதை விட்டுவிட்டு விவசாயிகளுக்கு சாதகமாக பேசுவது போல் நடித்து எனது தலைமையிலான அரசை எடியூரப்பா வசைபாடி வருகிறார்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

பேட்டியின்போது முதல்-மந்திரி சித்தராமையாவுடன், வருவாய் துறை மந்திரி காகோடு திம்மப்பா, கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் மந்திரி எச்.கே.பட்டீல் உள்பட பலர் உடன் இருந்தனர். 

Next Story