பா.ஜனதா முன்னாள் மந்திரி மீது வழக்கு ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து நடவடிக்கை


பா.ஜனதா முன்னாள் மந்திரி மீது வழக்கு ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து நடவடிக்கை
x
தினத்தந்தி 10 April 2017 10:11 PM GMT (Updated: 10 April 2017 10:11 PM GMT)

அரசு நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பா.ஜனதா முன்னாள் மந்திரி ஏக்நாத் கட்சே மீது, ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

மும்பை,

முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான மந்திரிசபையில் வருவாய்த்துறை மந்திரியாக பதவி வகித்தவர், ஏக்நாத் கட்சே.

நில மோசடி

பா.ஜனதா மூத்த தலைவராகவும், மந்திரிசபையில் 2-வது இடத்தில் அங்கம் வகித்த இவர், புனே போசாரி பகுதியில் மராட்டிய தொழில் மேம்பாட்டு கழகத்துக்கு சொந்தமான (எம்.ஐ.டி.சி) ரூ.40 கோடி மதிப்பிலான 3 ஏக்கர் நிலத்தை தனது மனைவியின் பெயருக்கு வெறும் ரூ.3 கோடியே 75 லட்சத்துக்கு முறைகேடாக மாற்றிக்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதேபோல நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமுடன் தொலைபேசியில் உரையாடியதாகவும் அவர் மீது புகார் எழுப்பப்பட்டது. குறிப்பாக நில மோசடி புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இதைத்தொடர்ந்து, ஏக்நாத் கட்சே மந்திரி பதவியை ராஜினாமா செய்ய நேர்ந்தது. மேலும் நில மோசடி குற்றச்சாட்டின்கீழ், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் போர்க்கொடி உயர்த்தினர்.

குற்றமற்றவர்

இதுபற்றி விசாரணை நடத்த விசாரணை குழு ஒன்றை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நியமித்தார். விசாரணை நிறைவில், 64 வயது ஏக்நாத் கட்சே குற்றமற்றவர் என்று விசாரணை குழு அறிக்கை தாக்கல் செய்தது.

இதன் காரணமாக அவர் மீண்டும் மந்திரிசபையில் இணையலாம் என்று பரபரப்பாக பேசப்பட்டது. இந்த சூழலில், நில மோசடி புகார் தொடர்பாக ஏக்நாத் கட்சேக்கு எதிராக கூடுதல் ஆதாரங்களுடன் சமூக ஆர்வலர் ஒருவர் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.

வழக்குப்பதிவு

இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏக்நாத் கட்சேக்கு எதிராக முகாந்திரம் இருப்பதை அறிந்த நீதிபதிகள், இதுபற்றி லஞ்ச ஒழிப்பு பிரிவின் கூடுதல் டி.ஜி.பி. விசாரணைக்கு உத்தரவிட்டனர்.

அதன்படி, நேற்று புனே பந்த் கார்டன் போலீஸ் நிலையத்தில், ஏக்நாத் கட்சே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், பாரதீய ஜனதா மூத்த தலைவரான ஏக்நாத் கட்சே, அவரது மனைவி ஆகியோர் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்று தெரிகிறது.

நில மோசடி புகாரின்கீழ், ஏக்நாத் கட்சே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது பா.ஜனதா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story