திருப்பூரில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு


திருப்பூரில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 5 May 2017 10:45 PM GMT (Updated: 2017-05-06T03:23:26+05:30)

திருப்பூரில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

திருப்பூர்,

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது பல பெட்ரோல் விற்பனை நிலையங்களில் மீட்டர்களில் ‘சிப்’ களை பொருத்தி அளவுகளை குறைத்து வைத்து வாடிக்கையாளர்களிடம் மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் சோதனை செய்ய மத்திய அரசு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தது.

அதன் அடிப்படையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் சோதனை நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதற்காக தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், எண்ணெய் நிறுவன அதிகாரிகள் அடங்கிய 2 குழுக்கள் அமைக்கப்பட்டது. அவர்கள் திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து நடைபெறும்

அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட தாராபுரம் ரோட்டில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையங்களில் தொழிலாளர்கள் நல ஆய்வாளர் முருகேசன் தலைமையில் துணை ஆய்வாளர் கிருஷ்ணவேணி மற்றும் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் ஆகியோர் அதிரடியாக நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பெட்ரோல் நிரப்பும் எந்திரங்கள், அதில் வைக்கப்பட்டுள்ள அளவுகள், எந்திரங்களில் ஏதேனும் தொழில் நுட்ப மாறுபாடுகள் செய்யப்பட்டுள்ளனவா? என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். மேலும், அங்குள்ள தொழிலாளர்களிடமும் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. ஆனால் எந்த விற்பனை நிலையங்களிலும் குறைபாடுகள் கண்டறியப்படவில்லை என்றும், இருப்பினும் தொடர்ந்து இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஆய்வை மேற்கொண்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story