தர்மபுரி மாவட்டத்தில் வணிகர் தினத்தையொட்டி கடைகள் அடைப்பு


தர்மபுரி மாவட்டத்தில் வணிகர் தினத்தையொட்டி கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 5 May 2017 10:34 PM GMT (Updated: 2017-05-06T04:04:08+05:30)

வணிகர் தினத்தையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

தர்மபுரி,

ஆண்டுதோறும் மே 5-ந்தேதி வணிகர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி நேற்று தர்மபுரி மாவட்டத்தில் வணிகர் தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. தர்மபுரி நகரில் பஸ் நிலையத்தை சுற்றியுள்ள ஆறுமுக ஆசாரி தெரு, சின்னசாமி நாயுடு தெரு, முகமது அலி கிளப்ரோடு, பென்னாகரம் ரோடு, கடைவீதி, துரைசாமி நாயுடு தெரு உள்பட பல்வேறு பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.

இதுதொடர்பாக ஏற்கனவே பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டதால் கடை அடைப்பால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. நகரில் ஆங்காங்கே மருந்து கடைகள், ஓட்டல்கள், டீக்கடைகள் வழக்கம் போல் செயல்பட்டன. வணிகர்கள் கடை அடைப்பால் பெரும்பாலான சாலைகள் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

அரூர்- பொம்மிடி

அரூரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் பஸ் நிலையம், கச்சேரி மேடு, கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது. மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, கோபிநாதம்பட்டி கூட்ரோடு, கடத்தூர், ஒடசல்பட்டி கூட்ரோடு, கம்பைநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. பொம்மிடியில் வணிகர் தினத்தையொட்டி அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

பாலக்கோடு, காரிமங்கலம், மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, பென்னாகரம், ஒகேனக்கல், பாப்பாரப்பட்டி, தொப்பூர், ஏரியூர், பெரும்பாலை, இண்டூர் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த வணிகர்கள் மாவட்ட வணிகர் சங்க தலைவர் வைத்திலிங்கம் தலைமையில் விழுப்புரத்தில் நடந்த வணிகர் சங்க மாநில மாநாட்டிற்கு சென்று இருந்தனர்.

Next Story