தர்மபுரி அருகே புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடை முன்பு பொதுமக்கள் முற்றுகை போராட்டம்


தர்மபுரி அருகே புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடை முன்பு பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 5 May 2017 10:48 PM GMT (Updated: 2017-05-06T04:18:41+05:30)

தர்மபுரி அருகே புதிதாக திறக்கப்பட்ட மதுக் கடையை மூட வலியுறுத்தி அந்த கடை முன்பு பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டிருந்த மதுக்கடைகள் மூடப்பட்டன. இதையடுத்து மூடப்பட்ட மதுக்கடைகளுக்கு பதிலாக புதிய மதுக்கடைகளை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. கிராமப்புற பகுதிகளில் புதிய மதுக்கடைகள் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தர்மபுரி அருகே உள்ள சோகத்தூர் ஊராட்சிக்குட்பட்ட நல்லக்கவுண்டனஅள்ளியில் கட்டப்பட்டுள்ள ஒரு புதிய கட்டிடத்தில் நேற்று முன்தினம் புதிதாக மதுக்கடை திடீரென திறக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த மதுபான பிரியர்கள் அந்த மதுக்கடையில் குவிந்தனர். இதனால் தர்மபுரி-பென்னாகரம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திடீரென திறக்கப்பட்ட புதிய மதுக்கடையால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

முற்றுகை போராட்டம்

இந்த புதிய மதுக்கடையை உடனடியாக மூட வலியுறுத்தி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று அந்த மதுக்கடை முன்பு திரண்டனர். அங்கு வெயிலையும் பொருட்படுத்தாமல் காலை முதல் மதியம் வரை கடை முன்பு தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சோகத்தூர் கூட்டுரோடு அருகே கல்லூரிகள் நிறைந்துள்ள பகுதியில் திறக்கப்பட்டுள்ள புதிய மதுக்கடையினால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த மதுக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று போராட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் வலியுறுத்தினார்கள்.

இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணக்குமார், மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரோஜா, கிராம நிர்வாக அலுவலர் ராஜ்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்களின் கோரிக்கை தொடர்பாக அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று இந்த மதுக்கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story