வெளிநாடு சுற்றுலா சென்றுள்ள மந்திரிகளை நாடு திரும்ப உத்தரவிட வேண்டும்


வெளிநாடு சுற்றுலா சென்றுள்ள மந்திரிகளை நாடு திரும்ப உத்தரவிட வேண்டும்
x
தினத்தந்தி 5 May 2017 10:52 PM GMT (Updated: 2017-05-06T04:22:41+05:30)

வெளிநாட்டிற்கு சுற்றலா சென்றுள்ள மந்திரிகளை நாடு திரும்ப உத்தரவிடவேண்டும் என பிரதமருக்கு, முன்னாள் முதல்–மந்திரி பிரிதிவிராஜ் சாவன் வேண்டுகொள் விடுத்துள்ளார்.

மும்பை,

விவசாயிகள் விளைவித்த பயிர்களுக்கு சரியான விலை கிடைக்காமல் தவிக்கும் நிலையில் வெளிநாட்டிற்கு சுற்றலா சென்றுள்ள மந்திரிகளை நாடு திரும்ப உத்தரவிடவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு, முன்னாள் முதல்–மந்திரி பிரிதிவிராஜ் சாவன் வேண்டுகொள் விடுத்துள்ளார்.

உற்பத்தி அதிகரிப்பு

மராட்டியம் மற்றும் இதர மாநிலங்களில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பருப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது. அதீத விளைச்சல் காரணமாக அதன் விலை மிகவும் குறைந்துவிட்டது. இதனால் உற்பத்தி சேலைவை கூட பெறமுடியாத அவல நிலைக்கு விவசாயிகள் சென்றுள்ளனர். எனவே அரசு குறைந்த பட்ச ஆதரவு விலையில் பருப்புகளை கொள்முதல் செய்து விவசாயிகளை நஷ்டத்தில் இருந்து காக்கவேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் மராட்டிய விவசாயத்துறை மந்திரி பாண்டுரங் பன்கர் மற்றும் உணவு மற்றும் பொது வினியோகத்துறை மந்திரி கிரிஷ் பபத் ஆகியோர் 15 நாட்கள் சுற்றப்பயணமாக வெளிநாடு சென்றிருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் முதல்–மந்திரி பிரிதிவிராஜ் சவான், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–

மோடியின் வேண்டுகொள்

நீங்கள்( பிரதமர் நரேந்திர மோடி) பருப்பு உற்பத்தியை அதிகரிக்குமாறு விடுத்த கோரிக்கையை ஏற்று விவசாயிகள் உற்பத்தியை அதிகப்படுத்தியுள்ளனர். ஆனால் துரதிருஷ்டவசமாக, அரசின் கொள்முதல் முறையில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளால் விளைவித்த பருப்புக்கு சரியான விலை கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இதனால் மராத்வாடா மற்றும் விதர்பா மண்டலங்களை சேர்ந்த விவசாயிகள் குறைந்த பட்ச ஆதரவு விலை கூட கிடைக்காமல் தற்கொலை செய்துகொள்ளும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்

சுற்றுலா

ஆனால் நெருக்கடிக்கு தார்மீக பொறுப்பேற்று முனைப்புடன் செயல்படவேண்டிய மராட்டிய பொது வினியோகத்துறை மந்திரி, விவசாயத்துறை மந்திரி இருவரும் குடும்பத்துடன் 15 நாட்கள் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். இது விவசாயிகளிடேயே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே நீங்கள் தற்போது நிலவும் நெருக்கடியான நிலையை புரிந்துகொண்டு, உடனே மராட்டிய முதல்–மந்திரியை தொடர்புகொண்டு, வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ள மந்திரிகளை நாடு திரும்பி தங்கள் பணியை தொடர உத்தரவிடுமாறு வெளியுறுத்தவேண்டும்.

இவ்வாறு அந்த கடித்தத்தில் கூறப்பட்டிருந்தது.


Next Story